

மும்பை: கைரன் பொல்லார்டின் இடத்தை டிம் டேவிட் நிரப்பியுள்ளார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. இஷான் கிஷன் 28, கேமரூன் கிரீன் 44, சூர்யகுமார் யாதவ் 55 ரன்கள் குவித்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் முதல் 3 பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை அணியில் தூண் போன்று இருந்த கைரன் பொல்லார்டின் இடத்தை நிரப்புவது மிகப்பெரிய விஷயம். அவரைப் போன்றே டிம் டேவிட் அபாரமாக விளையாடி வருகிறார். அவரது இடத்தில் டிம் டேவிட் விளையாடுவதற்கு திறனும், திறமையும் இருக்கிறது. பொல்லார்டின் இடத்தை டிம் டேவிட் நிரப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.