Published : 12 Sep 2017 07:48 PM
Last Updated : 12 Sep 2017 07:48 PM

பயிற்சி ஆட்டம்: வாரியத்தலைவர் அணியை நொறுக்கியது ஆஸ்திரேலியா

கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 103 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கார்ட்ரைட் ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் டேவிட் வார்னருடன் இணைந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சீராக ரன் குவித்தார்.

வார்னர் 48 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் குஷாந்த் படேல் பந்தில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 105 ரன்கள் சேர்த்தது. சிறிது நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஸ்மித் ஆட்டமிழந்தார். அவர், 68 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 55 ரன்கள் சேர்த்தார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டையும் வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ், டிரெவிஸ் ஹெட்டுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். டிரெவிஸ் ஹெட் 63 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், ஸ்டோனிஸ் 60 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் 24 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் விளாச 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது.

வாரியத் தலைவர் லெவன் அணித் தரப்பில் குஷாந்த் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த வாரியத் தலைவர் அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி 7, நிதிஷ் ராணா 19 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கோஷ்வாமி 43, மயங்க் அகர்வால் 42, கேப்டன் குர்கீரத் மான் 27, வாஷிங்டன் சுந்தர் 11, அக்சய் கர்னேவர் 40, கோவிந்தா போடார் 0, சவுத்ரி 4, ரகில் ஷா 3 ரன்களில் நடையை கட்ட 48.2 ஓவர்களில் 244 ரன்களுக்கு வாரியத் தலைவர் அணி ஆல் அவுட் ஆனது. குஷாந்த் படேல் 41 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஆஷ்டன் அகர் 4, ரிச்சர்ட்சன் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

பயிற்சி ஆட்டத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி 17-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x