

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் டூ பிளெஸ்ஸி, ஆர்சிபி அணியை வழிநடத்துகிறார். கடந்த சில போட்டிகளாக அவர் கேப்டன்சி பணியை கவனிக்கவில்லை.
இன்னிங்ஸை தொடங்கிய விராட் கோலி மற்றும் டூ பிளெஸ்ஸி நிதானமாக ஆடினர். சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தியது லக்னோ. அதற்கு காரணம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததுதான். முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறினர். அதனால் அனுஜ் ராவத், மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், டூ பிளெஸ்ஸி, மஹிபால் லோம்ரோர் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதில் கேப்டன் டூ பிளெஸ்ஸி, 40 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் மட்டுமே அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
தினேஷ் கார்த்திக், 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ரன் அவுட்டாகி வெளியேறினார். கரண் சர்மா, சிராஜ் ஆகியோர் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது. மீண்டும் ஒருமுறை ஆர்சிபி அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறியுள்ளனர்.
மழை காரணமாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. லக்னோ பவுலர் நவீன்-உல்-ஹக், 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ரவி பிஷ்னோய் மற்றும் அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். கிருஷ்ணப்ப கவுதம், ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். லக்னோ அணி சிறப்பாக பந்து வீசி இருந்தது.