

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தமாக 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, பர்ப்பிள் கேப் வென்றுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்பதற்கான அங்கீகாரமாக பந்து வீச்சாளர்களுக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் அவரை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதுவரை சென்னை அணிக்காக இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 33.2 ஓவர்கள் வீசி 369 ரன்கள் விட்டுக் கொடுத்து, 17 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் 76 பந்துகளில் ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பால்களாக வீசி உள்ளார். இன்று (ஞாயிறு) சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் அவர் பர்ப்பிள் கேப் வென்றுள்ளார்.
விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்டிருந்தாலும் ரன்களை சிக்கனமாக வழங்க அவர் தவறி வருகிறார். லைன் மற்றும் லெந்தில் கட்டுப்பாடு இல்லாததே இதற்கு காரணம். குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக 19-வது ஓவரில் இரண்டு ஒய்டுகளை வீசி அவர் இம்சித்தார். அது இந்தப் போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். ஏனெனில் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவைப்பட்ட 3 ரன்களை ஓட்டம் எடுத்து கடந்தனர் பஞ்சாப் வீரர்கள். இந்நிலையில், நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் குறித்த மீம்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த சீசனில் உதிரிகள் வழங்குவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். நடப்பு சீசனில் இதுவரை மட்டும் அவர் விளையாடி உள்ள போட்டிகளில் 17 ஒய்டுகளை வீசி உள்ளார். நோ-பால் இதில் கணக்கிடவில்லை.