

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 42-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டி ஐபிஎல் கிரிக்கெட்டின் 1000-மாவது போட்டியாக அமைந்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. வழக்கம் போலவே அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என இருவரும் முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெய்ஸ்வாலுக்கு துணையாக நின்ற பட்லர், 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அதன் பின்னர் பேட் செய்ய வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், படிக்கல், ஹோல்டர், ஹெட்மயர், துருவ் ஜுரல் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இருந்தும் மறுமுனையில் ஜெய்ஸ்வால் அடங்கமறுத்தார். எத்தனை விக்கெட்டுகள் சரிந்தாலும் நான் எனது பாணி ஆட்டத்தை ஆடுவேன் என சொல்வது போல இருந்தது அவரது இன்னிங்ஸ்.
அதன் பலனாக ஐபிஎல் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஜெய்ஸ்வால். இந்த சதம் அவரது சொந்த ஊரான மும்பை மண்ணில் பதிவு செய்தது கூடுதல் சிறப்பு. 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டர்கள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். கடைசி ஓவரின் 4-வது பந்தில் அவரது விக்கெட்டை அர்ஷத் கான் கைப்பற்றினார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை அணி விரட்டி வருகிறது.
ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஜெய்ஸ்வால் முதல் இடம் பிடித்துள்ளார். அதே போல சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் ஐபிஎல் அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் இந்த அபார இன்னிங்ஸ் மூலம் அவர் படைத்துள்ளார். நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் ஆனான அவர் ஆரஞ்சு கேப்பை (தொப்பி) பெற்றுள்ளார்.