Published : 30 Apr 2023 07:42 AM
Last Updated : 30 Apr 2023 07:42 AM
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர், டேவிட் மில்லர் ஆகியோரது அதிரடியால் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது குஜராத் அணி.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரரான குர்பாஸ் 39 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான நாராயண் ஜெகதீசன் 19, ஷர்துல் தாக்குர் 0, வெங்கடேஷ் ஐயர் 11, கேப்டன் நிதிஷ் ராணா 4, ரிங்கு சிங் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆந்த்ரே ரஸ்ஸல் 19 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் விளாசினார். டேவிட் வைஸ் 8 ரன்கள் சேர்த்தார்.
குஜராத் அணி சார்பில் மொகமது ஷமி 3 விக்கெட்களையும் ஜோஷ்வா லிட்டில், நூர் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தனது 100-வது ஆட்டத்தில் களமிறங்கிய ரஷித் கான் 4 ஓவர்களை வீசி 54 ரன்களை வாரி வழங்கி, விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் ஏமாற்றம் அளித்தார். 180 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 35 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்து சுனில் நரேன் பந்தில் ஆட்டமிழந்தார். ரித்திமான் சாஹா 10, கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களில் வெளியேறினர்.
வெற்றிக்கு கடைசி 8 ஓவர்களில் 82 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் விஜய் சங்கர் 24 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், டேவிட் மில்லர் 18 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் விளாச குஜராத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் கொல்கத்தா அணிக்கு 6-வது தோல்வியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள கொல்கத்தா 3 வெற்றிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT