

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 198 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி அணிக்காக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் இன்னிங்ஸை துவங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் வார்னர். அதன்பின்னர் பேட் செய்ய வந்த மிட்செல் மார்ஷ், சால்ட் உடன் இணைந்து 112 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
அவர்கள் இருவரும் இன்னிங்ஸை அணுகிய விதம் டெல்லி அணி மிக விரைவாக இலக்கை எட்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. சால்ட், 35 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார். மணிஷ் பாண்டே, 1 ரன் எடுத்து வெளியேறினார். மார்ஷ், 39 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். 1 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.
அதன் பின்னர் பிரியம் கார்க் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் தங்களது விக்கெட்டை இழந்தனர். ஹைதராபாத் அணிக்காக இறுதி ஓவர்களை வீசிய புவனேஷ்வர் மற்றும் நடராஜன் சிறப்பாக பந்து வீசினர். அதன் காரணமாக 14 பந்துகளில் 29 ரன்கள் டெல்லி வீரரான அக்சர் படேலால் எடுக்க முடிந்தது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை மார்ஷ் பெற்றார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார்.