Last Updated : 15 Sep, 2017 10:04 AM

 

Published : 15 Sep 2017 10:04 AM
Last Updated : 15 Sep 2017 10:04 AM

கால் இறுதியில் சிந்து: ஆடவர் பிரிவில் காஷ்யப் வெளியேற்றம்

கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில் காஷ்யப் 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.

கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, 16-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் நிட்சோன் ஜின்டாபோலை எதிர்த்து விளையாடினார். சுமார் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீராங்கனையான சிந்து, கால் இறுதியில் 19-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் மினாட்சு மிடானியுடன் மோதுகிறார். மினாட்சு கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கமும், 2012-ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் சாய்னா நெவாலை வீழ்த்தி பட்டமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியவரும் சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் பட்டம் வென்றவருமான இந்தியாவின் சமீர் வர்மா, ஹாங்காங்கின் வாங் விங், கி வின்சென்டை எதிர்த்து விளையாடினார். 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சமீர் வர்மா 21-19, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தார். இந்த சுற்றில் சமீர் வர்மா, முதல் நிலை வீரரான ஹாங்காங்கின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார்.

சன் வான் ஹோ, தனது 2-வது சுற்றில் 46-வது இடத்தில் உள்ள இந்தியாவின் காஷ்யப்புடன் விளையாடினார். ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சன் வான் ஹோ 21-16, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் 17-ம் நிலை வீரரான இந்தியாவின் சாய் பிரணீத் 13-21, 24-26 என்ற கணக்கில் போராடி 12-ம் நிலை வீரரான சீன தைபேவின் சூ வெய் வாங்கிடம் தோல்வியடைந்து கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 23-21, 16-21, 21-8 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லீ ஜே ஹூய், லீ யங் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x