Published : 28 Apr 2023 02:54 PM
Last Updated : 28 Apr 2023 02:54 PM

“எங்கள் போராட்டம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் ஏன் வாய் திறக்கவில்லை?” - வினேஷ் போகத் கேள்வி

வினேஷ் போகத்

புதுடெல்லி: “எங்கள் போராட்டம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் வாய் திறக்கவில்லை” என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த ஒட்டுமொத்த தேசமும் கிரிக்கெட்டை வழிபடுகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் இதுவரை வாய் திறக்கவில்லை. நீங்கள் இந்த விவகாரத்தில் எங்கள் தரப்புக்கு ஆதரவாக எதுவும் பேச வேண்டாம். குறைந்தபட்சம் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ, அது குறித்து நடுநிலையிலாவது எதாவது பேசுங்கள். நீங்கள் பேசாமல் இருப்பதுதான் எனக்கு வலியைத் தருகிறது.

கிரிக்கெட், குத்துச்சண்டை, பாட்மிண்டன் என எந்த விளையாட்டு வீரரும் இதுகுறித்து பேசவில்லை. நம் நாட்டில் பெரிய விளையாட்டு வீரர்கள் இல்லையா என்ன? கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள்... அமெரிக்காவில் பிளாக் லைஃப்ஸ் மேட்டர் பிரச்சாரத்துக்கு அவர்கள் ஆதரவு காட்டினார்கள். நாங்கள் அந்த அளவுக்கு கூட தகுதியானவர்கள் இல்லையா?” என்று தெரிவித்தார்.

முன்னதாக, பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்களை தாண்டி போராட்டம் நடந்து வருகிறது. கபில் தேவ் உள்ளிட்டவர்கள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி நடத்தி வரும் போராட்டம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. | வாசிக்க > “மல்யுத்த வீராங்கனைகளின் நியாயமான எதிர்ப்பை இழிவுபடுத்துவது அழகில்லை” - பி.டி.உஷாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x