

மும்பை: கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வயதில் அரைசதத்தை எட்டி இருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவருக்கு உலக அளவில் வாழ்த்துகள் குவிந்தன. மும்பை - பஞ்சாப் (ஏப்ரல் 22) இடையிலான போட்டியின் போதே அவருக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது ஆரம்பமானது. இந்தச் சூழலில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சச்சின் நன்றி சொல்லியுள்ளார்.
“களத்தில் வெல்லும் கோப்பைகளுடன் களத்திற்கு வெளியே பெறும் நட்புகளும் வாழ்வில் சிறப்பு சேர்க்கின்றன. உங்கள் அன்பையும், பாசத்தையும் பெறுவதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் அனுப்பிய அனைத்து அழகான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வாழத்துகள் மூலம் நான் பெற்ற அந்த அரவணைப்பை விவரிக்க என்னிடம் எனக்கு வார்த்தைகள் இல்லை. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என சச்சின் ட்வீட் செய்துள்ளார்.
அதோடு சேர்த்து ‘எனக்கு 50 வயது ஆகவில்லை. 25 வருட அனுபவமுள்ள 25 வயது இளைஞன்’ எனவும் ட்வீட் செய்துள்ளார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் லாரா மற்றும் சச்சின் பெயரில் வாயில் திறக்கப்பட்டது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஸ்டாண்ட் ஒன்றுக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டது. மும்பையில் தன் ரசிகர்களை சந்தித்த சச்சின், அவர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டி மகிழ்ந்தார். சமூக வலைதளத்தில் அவரை பலரும் வாழ்த்தியது என அவரது பிறந்த நாளன்று மக்களின் அன்பை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.