Published : 26 Apr 2023 08:09 AM
Last Updated : 26 Apr 2023 08:09 AM
புதுடெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
இதில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் இடம் பெற்றிருந்த அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் அனுபவம் வாய்ந்த அஜிங்க்ய ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 மாதங்களுக்குப் பிறகு ரஹானே டெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக அவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். நடுவரிசை பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயர் முதுகுவலி காயத்தால் தேர்வு செய்யப்படவில்லை.
வெளிநாட்டு ஆடுகளங்களில் அனுபவ வீரர் தேவை என்பதால் அவரது இடத்தை ரஹானே பிடித்துள்ளார். 34 வயதான ரஹானே உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்த சீசனில் மும்பை அணியை வழிநடத்திய நிலையில் 700 ரன்கள் சேர்த்திருந்தார். மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடி வருகிறார்.
மற்றபடி வழக்கமான வீரர்களே ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் இடம் பெற்றுள்ளனர். துணை கேப்டனாக யாரும் நியமிக்கப்படவில்லை. பிரதான விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் இடம் பெற்றுள்ளார். எனினும் சமீபகாலமாக பேட்டிங்கில் தடுமாறிவரும் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கிலேயே வேறு விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக மொகமது ஷமி, மொகமது சிராஜ், ஜெயதேவ் உனத்கட், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணி விவரம்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்குர், மொகமது ஷமி, மொகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT