நாட்டில் உள்ள திறமையான வீரர்களுக்கு தரமான உள்கட்டமைப்புகளை வழங்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு அமைச்சர்கள் பங்கேற்ற 'சிந்தன் ஷிவிர்' (சிந்தனை முகாம்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் நாட்டுக்காக பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர். இந்தியாவின் விளையாட்டு பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.

ஒரு வீரர் தனியாக பயிற்சி செய்து உடற்தகுதியை அடைய முடியும், ஆனால் வீரர், வீராங்கனைகள் அற்புதமான செயல்திறனுக்காக தொடர்ந்து விளையாட வேண்டும். எனவே, உள்ளூரிலேயே அதிகளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இது வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள உதவும்.விளையாட்டுத் துறை அமைச்சராக, எந்த விளையாட்டுப் போட்டியும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ரூ.400 கோடி மதிப்பிலான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், தற்போது வடகிழக்கு மாநிலங்களை மேம்பாட்டிற்கான புதிய திசையில் பயணிக்கச் செய்துள்ளன. இம்பாலில் அமைக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை எதிர்காலத்தில் நிச்சயம் உருவாக்கித் தரும். இதற்கு கேலோ இந்தியா போன்ற திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் வெறும் சம்பிரதாயமாக இருக்கவில்லை, ஆனால் கவனமாக அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு திறமையான வீரர்களுக்கும் தரமான உள்கட்டமைப்புகளை வழங்கவும், இந்தியாவை முன்னணி விளையாட்டு நாடாக மாற்ற குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை வகுக்கவும் மத்திய மற்றும் மாநில விளையாட்டு அமைச்சர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து தரப்பில் இருந்தும் எடுக்கப்படும் முயற்சிகளால் மட்டுமே இந்தியா முன்னணி விளையாட்டு நாடாக தன்னை நிலைநிறுத்த முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in