

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது. ஆனால் பயிற்சியாளர் சைரஸ் போன்ஸா அவர்களுடன் செல்லாதது வீரர், வீராங்கனைகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார் என்பதும் தெரியவில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்கு பயிற்சியளித்து வரும் போன்ஸா, கிளாஸ்கோ நகருக்கு அனுப்பி வைக்கப்படாதது குறித்து அவரிடம் கேட்டபோது, “ஏன் நீக்கப்பட்டேன். என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் என்னிடம் எந்த பதிலும் இல்லை. இந்திய அணியுடன் செல்ல முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது” என்றார். கடைசி நேரத்தில் கிளாஸ்கோ செல்ல வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது, “அது தெரியாது” என்றார்.
இது தொடர்பாக கிளாஸ்கோ சென்றுள்ள ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்றுள்ள ஒரு வீரர் கூறுகையில், “சைரஸ் எங்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும். அவருடன் அதிக நேரம் செலவிட்டிருக்கிறோம். எங்கள் அனைவருக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்கியவர். கிளாஸ்கோவுக்கு எங்களுடன் அவர் வராதது ஏமாற்றமாக இருக்கிறது” என்றார்.