

3வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளான இன்று கேரி பாலன்ஸைத் தொடர்ந்து இயன் பெல் சதமெடுத்தார். இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 444 ரன்களை எடுத்துள்ளது,.
ஆட்டத்தின் 135வது ஓவரை ஜடேஜா வீச 2வது பந்தை மேலேறி வந்து நேராக சிக்ஸ் அடித்த பெல் சதத்தை நிறைவு செய்தார். அதன் பிறகு வெறி கொண்டு ஜடேஜா பந்தை அதே ஓவரில் விளாசினார் பெல்.
அதற்கு அடுத்த பந்து ஒதுங்கிக் கொண்டு கவர் திசையில் பவுண்டரி விளாசினார். மீண்டும் அடுத்த பந்தை மேலேறி வந்து சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தை பாயிண்டில் பவுண்டரி. ஜடேஜாவின் ஓவரை சிதறடித்தார் பெல்.
முன்னதாக உணவு இடைவேளைக்குச் சற்று முன் கேரி பேலன்ஸ் 156 ரன்களை எடுத்திருந்த போது ரோகித் சர்மாவின் பந்து ஒன்று திரும்பி எழும்ப தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது ஒரு ஓசி விக்கெட் என்று ரீப்ளேயில் தெரிந்தது. தொடையில் பட்டுச் சென்ற பந்துக்கு அவுட் கொடுத்தார் நடுவர்.
ஜோ ரூட் தட்டுத் தடுமாறி 25 பந்துகளில் 3 ரன்களை எடுக்க புவனேஷ் குமார் வீசிய வெளியே சென்ற பந்தை ஆடி எட்ஜ் செய்து தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சற்று முன் மோயீன் அலி 12 ரன்களை எடுத்து புவனேஷ் குமார் வீசிய ஷாட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்றார். பந்து மட்டையின் அடி விளிம்பில் பட்டு 2வது ஸ்லிப்பில் ரஹானேயிடம் செல்ல அதனை அவர் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
பெல் தற்போது 15 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 204 பந்துகளில் 126 ரன்களுடனும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.