Last Updated : 14 Sep, 2017 03:02 PM

 

Published : 14 Sep 2017 03:02 PM
Last Updated : 14 Sep 2017 03:02 PM

அணிக்கு மீண்டும் திரும்புவது கூறுவதற்கு எளிது நடைமுறையில் கடினம்: ரோஹித் சர்மா பேட்டி

காயம் காரணமாக 6 மாதகால ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட்டுக்குத் திரும்பிய ரோஹித் சர்மா, அணிக்குள் மீண்டும் வருவது கூறுவதற்கு எளிது நடைமுறையில் மிகமிகக் கடினமானது என்றார்.

செய்தி நிறுவனத்துக்கு ரோஹித் சர்மா அளித்த பேட்டி வருமாறு:

அணிக்கு மீண்டும் திரும்புவது என்பது எளிதானதல்ல, அதுவும் ஒரு பெரிய அறுவைசிகிச்சைக்குப் பின் நம் மண்டைக்குள் இருக்கும் பேய்களை ஆட்கொள்வது கடினம். அதாவது மீண்டும் காயமடைந்து விடுவோம், இந்த ஸ்ட்ரோக்கை ஆடினால் காயம்பட்டு ஒதுங்க வேண்டி வருமோ என்ற மனப்பேய்களை ஓட்டுவது கடினம். என் பேட்டிங் பார்ப்பதற்கு சுலபம் போல் தெரியும் ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

நான் காயத்திலிருந்து மீண்டு மறுவாழ்வு சிகிச்சை முடித்த பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கியது நல்லதாகப் போய்விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாகக் களமிறங்கிய போது களத்தில் முடிவெடுக்கும் போது எனக்கு காயம் ஏற்படுவது பற்றி நான் யோசிக்க முடியவில்லை.

அதே போல் இந்திய அணிக்காக ஆடும் போது என் மனம் வெற்றிடமாகி விடும், அங்கு எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடமேயில்லை.

புதிர் பவுலர் தனஞ்ஜயாவை ஆட்கொண்டது எப்படி?

அரைசதம் சிறப்பு வாய்ந்தது. ஆனால் அந்தப் போட்டியில் நான் தனஞ்ஜயாவை அதிகம் எதிர்கொள்ளவில்லை, அவர் பந்து வீச வந்த பிறகு ஒரு ஓவர் கழித்து நான் ஆட்டமிழந்து விட்டேன்.

பிறகு அவரது பந்து வீச்சு பற்றிய ஒரு கருத்தாக்கத்துக்கு வந்தேன், அவரது கூக்ளி மெதுவாக வருகிறது, லெக் பிரேக்குகள் வேகமாக வருகிறது, ஆஃப் பிரேக் எளிதாக ஆடக்கூடியதே. இப்படிப்பட்ட புரியாப்புதிர் ஸ்பின்னர்கள் பற்றி நாம் ஒன்று தெளிவாக புரிந்து கொள்வது நலம், அவர்கள் நிறைய தளர்வான பந்துகளை வீசுவார்கள் என்பதுதான் அது. தனஞ்ஜயாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆஸ்திரேலியா தொடர் பற்றி..

ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு விதமாகத் தயாரித்துக் கொள்வார்கள், என்னைப் பொறுத்தவரையில் மைதானச் சூழலைப் பொறுத்தே தயாரிப்புகள், எதிரணியை மையமாகக் கொண்டல்ல. எனவே ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் என் தயாரிப்பு முறையில் மாற்றமிருக்காது.

எந்தெந்த பிட்சில் எந்தெந்த ஷாட்களை ஆட முடியும் என்று இன்னிங்ஸை திட்டமிடுவது அவசியம். மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் இல்லையென்பதால் ஆஸ்திரேலியாவை எளிதில் எடைபோடக்கூடாது.

பந்தை வலுவாக அடிக்கிறேன் என்பதல்ல விஷயம், எல்லைக் கோட்டை பந்து கடந்தால் சிக்ஸ் அவ்வளவுதான் அது 75 மீ சென்றதா 110 மீ சென்றதா என்பது பிரச்சினையல்ல. எனவே பவர் பிரச்சினையல்ல, டைமிங்தான் முக்கியம், உடல் சமநிலை முக்கியம்

துணைக் கேப்டன் பொறுப்பு எனக்கு கிடைத்த கவுரவம், என்னுடைய வேளை விராட் கோலிக்கு களத்தில் உதவி புரிவது.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x