IPL 2023: CSK vs SRH | கான்வே பொறுப்பான ஆட்டம் - ஹைதராபாத்தை வீழ்த்தி 4வது வெற்றியை ருசித்தது சென்னை

IPL 2023: CSK vs SRH | கான்வே பொறுப்பான ஆட்டம் - ஹைதராபாத்தை வீழ்த்தி 4வது வெற்றியை ருசித்தது சென்னை
Updated on
1 min read

சென்னை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 28வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இதில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ஹைதராபாத் முதலில் பேட்டிங் களமிறங்கியது.

கடந்த போட்டியில் மயங்க் அகர்வால் ஓப்பனிங் செய்திருந்த நிலையில், இன்று அவர் மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக அபிஷேக் சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அவருடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ஹாரி ப்ரூக் 18 ரன்களில் முதல் விக்கெட்டாக அவுட்டானார்.

அபிஷேக் சர்மா 34 ரன்களிலும், ராகுல் திரிபாதி 21 ரன்களிலும் வெளியேற ஹைதராபாத் அணி சீர்குலைந்தது. கேப்டன் மார்க்ரம் 12 ரன், கிளாசன் 17 ரன் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவற, இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தது ஹைதராபாத். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு கான்வே - கெய்க்வாட் இணை சிறப்பான துவக்கம் கொடுத்தது. கான்வே சிறப்பாக ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை சமாளித்தார். முதல் 11 ஓவர்கள் வரை நீடித்தது இவர்கள் கூட்டணி. இருவரையும் பிரிக்க ஹைதராபாத் பவுலர்கள் எடுத்த முயற்சி கைகொடுக்கவில்லை.

11ஓவரின் கடைசி பந்தில், கெய்க்வாட் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகவே, அந்த கூட்டணி பிரிந்தது. கெய்க்வாட் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். கான்வே - கெய்க்வாட் இணைந்து 87 ரன்கள் சேர்த்திருந்தனர். இதன்பின் வந்த ரஹானே மற்றும் அம்பதி ராயுடு தலா 9 ரன்களில் நடையைக்கட்டினர். எனினும், மறுமுனையில் இருந்த கான்வே அரைசதம் பொறுப்புடன் விளையாடினார்.

இதனால் சென்னை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. கான்வே 77 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். ஹைதராபாத் தரப்பில் மயங்க் மார்கண்டே மட்டும் 2 விக்கெட் வீழ்த்தினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை பெறும் 4வது வெற்றி இதுவாகும். 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

அதேநேரம், ஹைதராபாத் 4வது தோல்வி கண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in