IPL 2023 | “என் பதற்றத்தை தோனி தணித்த விதம்...” - கடைசி ஓவர் அனுபவம் பகிர்ந்த பதிரானா

IPL 2023 | “என் பதற்றத்தை தோனி தணித்த விதம்...” - கடைசி ஓவர் அனுபவம் பகிர்ந்த பதிரானா
Updated on
1 min read

சென்னை: “முதல் 2 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் நான் பதற்றமாக இருந்தேன். ஆனால், கேப்டன் தோனி என்னை நிதானமாக பந்துவீச கூறினார்” என ஆர்சிபிக்கு எதிரான தனது கடைசி ஓவர் குறித்து சிஎஸ்கே பந்துவீச்சாளர் பதிரானா தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை நடந்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. டேவன் கான்வே 45 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 83 ரன்களையும் ஷிவம் துபே 27 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களையும் விளாசினர். 227 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் என்று ஆட்டத்தை நிறைவு செய்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 11 ரன்கள் விட்டுக் கொடுத்து சிஎஸ்கே அணிக்கு இக்கட்டான நிலையில் வெற்றியை பெற்று தந்தார் பதிரானா .

இந்த நிலையில், தனது கடைசி ஓவர் அனுபவத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். மதிஷா பதிரானா கூறும்போது “இது நல்ல ரன். ஆனால், இதனை நாம் எளிதாக எடுத்துவிடக் கூடாது என்று இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்தில் தோனி எங்களிடம் கூறினார். ஆனால், நான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் கடைசி ஓவரை வீச சற்று பதற்றமாக இருந்தேன். ஆனால், கேப்டன் தோனி என்னிடம் நிதானமாக இருக்குமாறும் என் திறமையில் நம்பிக்கை வைத்து பந்துவீசக் கூறினார். என்னை பயப்பட வேண்டாம் என்று கூறினார். இது கிரிக்கெட் நல்லது நடக்கும் கெட்டது நடக்கும் என்று கூறினார். அதன் முடிவில் நான் சிறப்பாக பந்து வீசினேன். இந்த வெற்றி எங்கள் அணிக்கு மன உறுதியை அளித்திருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in