கே.எல்.ராகுலின் பேட்டிங் அணுகுமுறை: ரவி சாஸ்திரி, மிதாலி, கெவின் பீட்டர்சன் சாடல்!

கே.எல்.ராகுல் | படம்: ஐபிஎல்
கே.எல்.ராகுல் | படம்: ஐபிஎல்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: கே.எல்.ராகுலின் பேட்டிங் அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலின் பேட்டிங் அணுகுமுறை பார்வையாளர்களை சலிப்படைய செய்யும் வகையில் உள்ளது. ஐபிஎல் 2023-ல் ஆறு இன்னிங்ஸ் விளையாடி 194 ரன்கள் எடுத்துள்ளார் அவர். பேட்டிங் சராசரி 32.33. ஸ்ட்ரைக் ரேட் 114.79. ஒட்டுமொத்தமாக அவர் விளையாடியுள்ள 106 ஐபிஎல் இன்னிங்ஸின் ஸ்ட்ரைக் ரேட் 135.

முதலில் இன்னிங்ஸை நிதானமாக தொடங்கிவிட்டு அப்படியே ஆட்டத்தில் வேகம் கூட்டம் என்பது அவரது திட்டம் எனத் தெரிகிறது. இது ஆதிகால அணுகுமுறை. டி20 கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்து அடித்து ஆட வேண்டும். ஆனால், விக்கெட்டை இழந்து விடுவோமோ என்ற சந்தேகத்தில் ராகுல் நிதானமாக பேட்டிங் செய்கிறார். இது பவர்ப்ளே ஓவர்களிலும் பார்க்க முடிகிறது. இதனை கிரிக்கெட் விமர்சகர்கள், வர்ணனையாளர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் சொல்லி வருகின்றனர்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக போல்ட் வீசிய முதல் ஓவரை சந்தித்த ராகுல் அதில் ரன் ஏதும் எடுக்கவில்லை. ஆறு பந்துகளும் டாட் ஆடி இருந்தார். இந்தப் போட்டியில் அவருக்கு லைஃப்பும் கிடைத்தது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அது குறித்து ரவி சாஸ்திரி, மிதாலி ராஜ் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் தெரிவித்துள்ளது.

“அந்த 39 ரன்கள் 69 அல்லது 70 ரன்களாக இருந்திருக்க வேண்டும். அதை செய்திருந்தால் லக்னோ அணியின் ரன்கள் 170 அல்லது 180 நெருங்கி இருக்கும். ஏனெனில், புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேனுக்கு எடுத்தவுடன் ரன் சேர்ப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும்” என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

“அவர் நிதானமாக இன்னிங்ஸை தொடங்கியதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதை ஈடு செய்ய வேண்டிய நேரத்தில் அவர் அவுட்டாகி விட்டார். அது அவர் ரன் குவித்திருக்க வேண்டிய சரியான தருணம்” என மிதாலி தெரிவித்துள்ளார்.

“கே.எல்.ராகுலின் பேட்டிங்கைப் பார்க்கவே எனக்கு மிகவும் சலிப்படைய செய்யும் விஷயமாக உள்ளது” என பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இதனை போட்டியின் நேரலை வர்ணனையில் இருந்த போதே அவர் சொல்லி இருந்தார். அவரது இந்த கருத்தை சிலர் அப்படியே சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். சிலர் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in