

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
155 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் - ஜெய்ஸ்வால் இணை நல்ல துவக்கம் தந்தது. இருவரும் ஸ்லோ இன்னிங்ஸ் ஆடினாலும், இருவருமே 40 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்தனர். குறிப்பாக பட்லர் வழக்கத்துக்கு மாறாக மெதுவாக விளையாடினார். இந்த இணையை ஸ்டோய்னிஸ் பிரித்தார்.
முதல் விக்கெட்டாக ஜெய்ஸ்வால் 44 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். இதன்பின்னர், 41 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த பட்லரை, ஸ்டோய்னிஸ் வீழ்த்தினார். இம்பேக்ட் பிளேயரான தேவ்தத் படிக்கல் 26 ரன்கள் மட்டுமே எடுக்க, மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாடாமல் அவேஷ் கான் பார்த்துக்கொண்டார்.
அவர் மூன்று விக்கெட் வீழ்த்த இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றிகண்டது. இந்த தொடரில் லக்னோ பெறும் 4வது வெற்றி இதுவாகும்.
லக்னோ இன்னிங்ஸ்: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இணை வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்களில் அவுட்டானார்.
இதன்பின் வந்தவர்களில் ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். மறுபுறம் பொறுப்பாக ஆடிய கைல் மேயர்ஸ் அரைசதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
எனினும் ஸ்டோய்னிஸ் 21 ரன்கள், நிகோலஸ் பூரன் 29 ரன்கள் எடுக்க, இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார்.