Published : 19 Apr 2023 03:46 PM
Last Updated : 19 Apr 2023 03:46 PM
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இறுதி ஓவரை வீசி இருந்தார் மும்பை அர்ஜுன் டெண்டுல்கர். அந்த ஓவரில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை பலரும் ட்ரோல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இடது கை பவுலரான அவர் கடந்த 2021 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்து வருகிறார். இருந்தும் நடப்பு சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில்தான் அறிமுக வீரராக அவர் களம் கண்டார். ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் விளையாடிய இரண்டாவது போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் 2.5 ஓவர்கள் மட்டுமே வீசி 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதில், 9 டாட்கள் அடங்கும். அவர் வீழ்த்திய அந்த ஒரு விக்கெட், அணியின் வெற்றியை உறுதி செய்த விக்கெட். மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அதைக் கொண்டாடித் தீர்த்தனர்.
“நான் பல வருடங்களாக சச்சினை பார்த்து வருகிறேன். ஆனால், அர்ஜுன் வீசிய கடைசி ஓவருக்கு பிறகு சச்சினின் முகத் தோற்றம் மிகவும் வித்தியாசமாகவும், அழகாகவும் இருந்தது” என ஹர்ஷா போக்ளே ட்வீட் செய்துள்ளார். அது மகனின் வெற்றியை பார்த்து ஆனந்தம் அடைந்த தந்தையான சச்சினின் பூரிப்பு என நெட்டிசன்கள் சொல்லி வருகின்றனர். அதற்கு முன்பு சச்சின் பதற்றமாக காணப்பட்டார். பந்தை ரிலீஸ் செய்வதிலும், வீசும் லெந்த்திலும் கவனம் வைத்தேன் என ஆட்டம் முடிந்த பிறகு அர்ஜுன் டெண்டுல்கர் சொல்லி இருந்தார்.
I have seen @sachin_rt for so many years now but the look on his face after Arjun bowled the last over was so different and so beautiful.
— Harsha Bhogle (@bhogleharsha) April 18, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT