Last Updated : 27 Sep, 2017 10:20 AM

 

Published : 27 Sep 2017 10:20 AM
Last Updated : 27 Sep 2017 10:20 AM

ஐசிசி புதிய விதிகள் நாளை முதல் அமல்

கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி-யின் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலாகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய விதிமுறைகளை நாளை முதல் அமல்படுத்துகிறது. இதன் மூலம் களத்தில் இனிமேல் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அது குற்றமாக கருதப்பட்டு உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். புதிய விதிமுறைகள் விவரம்:

கிரிக்கெட் பேட்கள் குறிப்பிட்ட அளவுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். பேட்டின் நீள, அகலத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை. ஆனால் முனையின் தடிமன் 40 மில்லி மீட்டரைத் தாண்டக்கூடாது. அதேபோல பேட்டின் ஒட்டுமொத்த தடிமன் 67 மில்லி மீட்டரை விடவும் அதிகமாக இருக்கக்கூடாது. பேட்டின் தடிமனை பரிசோதிக்க நடுவர்களுக்கு கருவி வழங்கப்படும்.

களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரர் நடுவரால் வெளியேற்றப்படுவார். ஆட்டம் முழுவதும் அவர் களமிறங்க அனுமதிக்கப்படமாட்டார்.

டி 20-ல் டிஆர்எஸ் பயன்படுத்தப்படும்.

டிஆர்எஸ் முறையில் கள நடுவர் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டால் இனிமேல் ஒரு டிஆர்எஸ் வாய்ப்பை இழக்கத் தேவையில்லை. இதனால் டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் 80 ஓவர்களுக்குப் பிறகு கூடுதலாக டிஆர்எஸ் வாய்ப்புகள் வழங்கப்படாது. டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் ஒரு இன்னிங்ஸூக்கு 2 டிஆர்எஸ் வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும்.

ரன் அவுட் சமயங்களில் பந்து ஸ்டெம்பில் படும்போது பேட்ஸ்மேன் (டைவிங் செய்யும் போது) மட்டை கிரிஸூக்குள் தரையைத் தொடும் வகையில் முழுமையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதாவது அதற்கு முன்பே அவர் கிரிஸை தொட்டுவிட்டால் அதன் பிறகு பந்து ஸ்டெம்பில் படும்போது அவருடைய பேட் கிரிஸில் படாமல் இருந்தாலும் அவுட் கிடையாது. ஏனெனில் அவர் அதற்கு முன்பே கிரிஸூக்குள் வந்துவிட்டார் என்பதால் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாது.

பவுண்டரிக்கு அருகே நின்று கேட்ச் செய்ய முயற்சிக்கும் போது. பந்தை முதலில் பிடிக்கும் பீல்டரின் கால், பவுண்டரி எல்லைக்குள் இருக்க வேண்டும். அதற்கு வெளியே நின்று கேட்ச் செய்தால் அது பவுண்டரியாக கருதப்படும்.

விக்கெட் கீப்பர், பீல்டர் ஆகியோரின் ஹெல்மெட்டில் பந்து பட்டு பிறகு கேட்ச் பிடித்தாலும் பேட்ஸ்மேன் அவுட் என்றே அறிவிக்கப்படுவார். அதேபோல் பந்து ஹெல்மெட்டில் பட்டாலும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. புதிய விதிமுறைகள் தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் நாளை மோதும் முதல் டெஸ்ட் போட்டியிலும், பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியிலும் அமலுக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x