Last Updated : 27 Sep, 2017 10:19 AM

 

Published : 27 Sep 2017 10:19 AM
Last Updated : 27 Sep 2017 10:19 AM

ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி ஹர்திக் பாண்டியா விளையாடுவது சிறப்பு: முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் கருத்து

ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி ஹர்திக் பாண்டியா பேட் செய்வது சிறப்பான விஷயம், அவரது அணுகுமுறையை இந்தியா ஏ அணியில் உள்ள வீரர்களும் பின்பற்ற முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளருமான ராகுல் திராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியா ஏ அணிக்காக ஹர்திக் பாண்டியா விளையாடினார். அப்போது அவரது திறனை மெருகேற்றியதிலும், ஊக்கம் அளித்ததிலும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் முக்கிய பங்கு வகித்தார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இமாலய சிக்ஸர்கள் விளாசி அனைவரது மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்திய பாண்டியா, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் (83 மற்றும் 78 ரன்கள்) அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த இரு ஆட்டங்களிலும் அவர், சிக்ஸர்கள் விளாசுவதில் வஞ்சகம் வைக்கவில்லை. இந் நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து ராகுல் திராவிட் கூறியதாவது:

எனது கண்ணோட்டத்தில் ஹர்திக் பாண்டியா மிகச் சிறந்த உதாரணம். அவர், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாட விரும்புகிறார், நாம் அனைவரும் கூறும் இயற்கையான ஆட்டத்தை அல்ல. பாராட்டுகள் அவருக்கு முழுமையாக உரித்தானது. இது நீங்கள் விரும்பும் வகையில் ஒரு வகையிலான ஆட்டத்தை மட்டும் விளையாடுவது அல்ல. உண்மையில், ஹர்திக் பாண்டியா தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிக்கொண்டுள்ளார்.

4-வது வீரராக களமிறங்கினால் ஒரு குறிப்பிட்ட வழியில் பேட் செய்வார். அதே வேளையில் 6-வது வீரராக களமிறக்கப்பட்டால் அதற்கு தகுந்த வழியில் பேட் செய்வார். நாளை அவர், 80 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலையில் களமிறக்கப்பட்டால், முதல் ஒருநாள் போட்டியில் தோனியுடன் இணைந்து விளையாடியது போன்றதொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இது நீங்கள் பார்க்க விரும்பும் முதிர்ச்சியை காட்டுகிறது.

‘இயற்கையான ஆட்டத்தை விளையாடுங்கள்’ என்ற கருத்தை அனைத்து இடங்களிலும் நான் கேட்டுள்ளேன். இது என்னை விரக்தியடையவே செய்யும். ஏனேனில் இயற்கையான விளையாட்டு என்ற ஒன்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. வித்தியாசமான சூழ்நிலைகளில் எப்படி விளையாடுகிறோம் என்பதில் தான் அனைத்தும் உள்ளது.

வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக பேட் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா போன்று விளையாட முடியுமானால் அது வளரும் கிரிக்கெட் வீரரின் அறிகுறிகளாகும். ஒரு சிலரால் தொடர்ந்து சீரான பங்களிப்பை வழங்க முடியும். அதேவேளையில் ஒரு சிலரால் அவ்வாறு செய்ய முடியாது.

ஆனால் இவர்களாலும் ஒரு கட்டத்தில் சிறந்த திறனை உருவாக்க முடியும். எதிர்பார்ப்பு, சவால்கள் இந்தியா ஏ அணி வீரர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளன.

எல்லா கால நிலையிலும், எல்லா சூழ்நிலைகளிலும், அனைத்து நிலை வீரர்களாகவும் விளையாட வேண்டும் என்பது தான் அது.

இவ்வாறு ராகுல் திராவிட் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x