

தோனி அடுத்த இரண்டு, மூன்று வருடங்கள் கூட விளையாடலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மொயின் அலி தெரிவித்திருக்கிறார்.
தோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்று கடந்த சில சீசன்களாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதனை எல்லாம் பொய்யாக்கி சிஎஸ்கே அணியை வழி நடத்தி வருவதுடன், சிறப்பான ஆட்டத்தை தோனி வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், தோனி அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவாரா? என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மொயில் அலியிடம் கேட்கப்பட்டது. இதற்கு மொயின் அலி பதிலளிக்கும்போது, “தோனி ராஜஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடியது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. நான் பயிற்சியின்போது தோனி விளையாடுவதை பார்த்து வருகிறேன். அவர் நம்பமுடியாத அளவில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த வயதில் இவர் இவ்வாறு ஆடுவது அற்புதமானது.
நீங்கள் பின் வரிசையில் களமிறங்கி ஆடுவது எளிதல்ல. மக்கள் அதனை அடிக்கடி மறந்துவிடுகிறார்கள். ஆனால், அதுதான் அவரை சிறப்பாக்கி இருக்கிறது. நிச்சயமாக தோனி அடுத்த வருடமும் விளையாடுவார். அவர் ஆடுவதை பார்க்கும்போது அவர் தனது ஆட்டத்தை நிறுத்துவார் என்று நான் கருதவில்லை. அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் கூட அவர் விளையாடலாம்.
சிஎஸ்கேவில் உள்ள ஒரு விஷயம் என்னவென்றால், நாங்கள் எப்போதும் முடிவை பற்றி சிந்திப்பது அல்ல, நாங்கள் போட்டியின்போது அந்தத் தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே உணர்ந்து செயல்படுகிறோம். அது முடிவைக் கவனித்துக்கொள்கிறது. அதைச் சிறப்பாகச் செய்தால் பெரும்பாலான ஆட்டங்களில் வெற்றி பெறலாம். அதுதான் எங்கள் திட்டம். இதுதான் தோனியின் தலைமையில் நாங்கள் புரிந்து கொண்ட விஷயம்” என்று அவர் தெரிவித்தார்.