

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ‘சூப்பர்மேன்’ போல அபாரமாக ஃபீல்டிங் செய்து அசத்தியிருந்தார் சிஎஸ்கே வீரர் ரஹானே.
இதில் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பெங்களூரு அணி விரட்டியது. 15 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அந்த அணி. இருந்தும் டூப்ளசி மற்றும் மேக்ஸ்வெல் அபாரமாக பேட் செய்தனர். இருவரும் இணைந்து 126 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் இருவரும் பேட் செய்த போது சென்னை அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸின் 9-வது ஓவரை ஜடேஜா வீசி இருந்தார்.
அந்த ஓவரின் 5-வது பந்தை சந்தித்த மேக்ஸ்வெல், லாங்-ஆஃப் திசையில் சிக்ஸர் அடிக்கும் நோக்கில் விளாசி இருப்பார். அங்கு ஃபீல்ட் செய்து கொண்டிருந்த ரஹானே, அதை கேட்ச் பிடிக்கும் நோக்கில் முயற்சி செய்திருப்பார். பந்தையும் பிடித்திருப்பார். ஆனால், பவுண்டரி லைனில் இருந்த அவர் பேலன்ஸை இழக்க நொடிபொழுதில் அலர்ட் ஆகி பந்தை மைதானத்திற்குள் போட்டிருப்பார். அதனால் ஒரே ஒரு ரன் மட்டுமே ஆர்சிபி எடுத்திருக்கும். ரஹேனாவின் இந்த அபார ஃபீல்டிங் சென்னை அணியின் வெற்றியில் முக்கியமான பங்கு வகித்தது என்றும் சொல்லலாம். ஏனெனில், சென்னை வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. அவரது கள செயல்பாடு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்தப் போட்டியில் பேட் செய்த அவர் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆகியிருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அடிப்படை விலைக்கு சென்னை அணி ரஹேனாவை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் வேகப்பந்து வீச்சை விளாசி வருகிறார் அவர். வேகப்பந்து வீச்சாளர்கள் அவருக்கு வீசிய 38 பந்துகளில் எதிர்கொண்ட அவர் 87 ரன்கள் எடுத்துள்ளார். 8 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 228.94.