Published : 18 Apr 2023 07:57 AM
Last Updated : 18 Apr 2023 07:57 AM

மலேசிய நீச்சல் போட்டி: வேதாந்த் 5 தங்கம் வென்று அசத்தல்!

வேதாந்த்

மும்பை: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசியன் இன்விடேஷனல் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி நடைபெற்றது. கடந்த 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் பல்வேறு வயதினருக்கான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.

இரு பந்தயங்களில் அவர், தனது சொந்த சாதனையையும் முறியடித்தார். இதுதொடர்பான தகவல்களையும், படங்களையும் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு நடிகர் சூர்யா, நடிகை லாரா தத்தா உள்ளிட்ட சினிமா துறை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா தொடரிலும் வேதாந்த் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வேட்டையாடி இருந்தார். மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய வேதாந்த் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x