

சிலி அணிக்கு எதிரான நாக்-அவுட் சுற்றுப் போட்டியில் பெனால்டி கிக் முறையில் பிரேசில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு அதன் முன்னணி வீரர்கள் நெய்மார், கோல் கீப்பர் சீசர், டேவிட் லூயிஸ், கேப்டன் தியாகோ சில்வா உள்ளிட்ட வீரர்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டனர். இது பிரேசில் கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மட்டுமல்ல பிரேசில் அணியின் முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர் ஸ்கொலாரி ஆகியோரையும் சற்றே நிலைகுலையச் செய்தது. இப்படி உணர்ச்சிவசப்படும் மன நிலையில் உள்ளவர்கள் உலகக் கோப்பையை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் பயிற்சியாளர் ஸ்கொலாரிக்கு பழக்கமான ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட் ரெஜினா பிராண்டோ பிரேசிலுக்கு விரைந்து வீரர்களுடன் உரையாடியுள்ளார்.
1970ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியின் கேப்டன் கார்லோஸ் ஆல்பர்டோ கூறுகையில், இன்றைய வீரர்கள் ரொம்பவே அழுகின்றனர் எனும் அளவுக்கு இந்த இளம் வீரர்களின் அழுகை இருந்தது. இதனாலேயே உடனடி கவனம் பெற்றுள்ளது.
சிலி அணிக்கு எதிரான பெனால்டி வெற்றியிலிருந்து தொடங்கியதல்ல இந்த அழுகை. குரேஷியா அணிக்கு எதிராக முதல் போட்டியில் பிரேசில் தேசிய கீதம் ஒலிக்கும் போதே நெய்மார் அழுதுள்ளார். அதன் பிறகு ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் வீரர்களின் அழுகைப் படலம் தொடர்ந்துள்ளது.
அதாவது ஏற்கனவே கார்டியன் இதழில் வெளிவந்த கட்டுரையில் பிரேசில் வீரர்கள் பந்துகள் தங்கள் காலுக்கு வந்தவுடன் உணர்ச்சிவசப்படுகின்றனர், என்றும் இதனால் கட்டுப்பாட்டை இழப்பதோடு, புத்திசாலித் தனமாக பந்தை எடுத்துச் செல்லவும் தவறுகின்றனர் என்று எழுதியிருந்தனர்.
அதையேதான் இன்று அணியின் டெகினிக்கல் டைரக்டர் கார்லோஸ் ஆல்பர்டோ பெரைராவும் கூறியுள்ளார்.
இவர் கூறுகையில் "ஒவ்வொன்றிற்கும் அழுகையா? ஜூலை 13ஆம் தேதி இறுதிப்போட்டி வரை அழுது கொண்டேதான் இருக்கப்போகிறோமா? பெனால்டி ஷூட் அவுட்டில் அழுகை, தேசிய கீதம் பாடும்போது அழுகை... போதும் அழுகையை நிறுத்துங்கள் என்று இவர் அறைகூவலே விடுத்துள்ளார்.
மனநல நிபுணர் தற்போது வீரர்களுடன் தொடர்ந்து பேசியது மூலம் ஓரளவுக்கு அழுகை கட்டுக்குள் வரும் என்று பிரேசில் அணியின் நிர்வாகம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.