Published : 13 Apr 2014 04:58 PM
Last Updated : 13 Apr 2014 04:58 PM

நெதர்லாந்து கிளப்பை பந்தாடியது இந்தியா

இந்திய ஹாக்கி அணி 7-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தைச் சேர்ந்த லெய்டன் ஹாக்கி கிளப் அணியைத் தோற்கடித்தது.

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் மே 31 முதல் ஜூன் 15 வரை நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெறவுள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

நெதர்லாந்தின் எக்ஸ்ட்கீஸ்ட் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, லெய்டன் ஹாக்கி கிளப்பை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடியபோதும், 18-வது நிமிடத்தில் இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் கோலடித்தார். தொடர்ந்து 21-வது நிமிடத்தில் நிதின் திம்மையா கோலடிக்க, இந்தியா தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது.

லெய்டன் அணி சரிவிலிருந்து மீள்வதற்காக கோலடிக்கும் முயற்சியில் இறங்கினாலும், அதை இந்திய கோல் கீப்பர் ஜேஷ் தகர்த்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 38 மற்றும் 39-வது நிமிடங்களில் இந்தியாவுக்கு இரு பெனால்டி வாய்ப்புகள் கிடைக்க, அவையிரண்டையும் கோலாக்கினார் ரூபிந்தர் பால் சிங். இதன்பிறகு லெய்டன் கிளப்புக்கு ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தபோதும், அதை இந்தியாவின் மாற்று கோல்கீப்பரான ஹர்ஜோத் சிங் முறியடித்தார். 43-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக்கினார் ராமன்தீப் சிங்.

இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, அவர்களை தடுக்க முடியாமல் தடுமாறியது லெய்டன் அணி. 45-வது நிமிடத்தில் ரகுநாத்தும், 53-வது நிமிடத்தில் யுவராஜ் வால்மீகியும் கோலடிக்க, இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. வரும் திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்தின் தேசிய கிளப்பான எச்.ஜி.சி. அணியை சந்திக்கிறது இந்தியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x