Published : 25 Jul 2014 10:00 AM
Last Updated : 25 Jul 2014 10:00 AM

கோலாகலமாகத் தொடங்கியது காமன்வெல்த்

20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சி, வண்ணமிகு வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ஒலிம்பிக்கில் கோலோச்சியவரான ஸ்காட்லாந்து சைக்கிள் வீரர் சர் கிறிஸ் ஹாய், காமன்வெல்த் கோலை (குயின் பேட்டன்) பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் ஒப்படைக்க, காமன்வெல்த் செய்தியை வாசித்த ராணி, பின்னர் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “20-வது காமன்வெல்த் போட்டியை தொடங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்” என குறிப்பிட்டார்.

71 நாடுகளைச் சேர்ந்த 4,929 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களின் இசை நிகழ்ச்சி, சச்சின் டெண்டுல்கரின் சிறிய வீடியோ காட்சி ஆகியவை இந்தியாவின் பெருமையை பறைசாற்றுவதாக அமைந்தன. யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதரான சச்சின், வீடியோவில் தோன்றி உலகம் முழுவதும் வாழும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பாடுபடுமாறு அனைவரையும் வலியுறுத்தினார். 35 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட செல்டிக் பார்க், பாலிவுட் பிரபலங்களின் இசை நிகழ்ச்சியால் அதிர்ந்தது.

போட்டியில் பங்கேற்கும் 71 நாடுகளின் கொடி அணி வகுப்பு சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமார் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல, அவர் பின்னால் சக வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் 2000 கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜேக் மோர்டான் நிறுவனம் நடத்தியது.

உக்ரைன் வான் பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியான 298 பேருக்காக தொடக்க விழா நிகழ்ச்சியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 3 மணி நேரம் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியை உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 கோடி பேர் கண்டுகளித்தனர்.

தொடக்க விழாவில் காமன்வெல்த் போட்டியின் அதிகாரப்பூர்வ பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதில் போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் தேசியக் கொடியும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்தியாவின் தேசியக் கொடி தலைகீழாக இடம்பெற்றிருந்தது பின்னர் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x