Published : 16 Apr 2023 07:20 AM
Last Updated : 16 Apr 2023 07:20 AM

IPL 2023 | 5-வது தோல்வியை சந்தித்தது டெல்லி

பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. அந்த அணி தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. தனது 47-வது அரை சதத்தை விளாசிய விராட் கோலி 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். கிளென் மேக்ஸ்வெல் 14 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 24 ரன்களும், கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 22, மஹிபால் லாம்ரோர் 26, ஷாபாஷ் அகமது 20, அனுஜ் ராவத் 15, ஹர்ஷால் படேல் 6 ரன்கள் சேர்த்தனர். தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா2 விக்கெட்களை வீழ்த்தினர்.பெங்களூரு அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் குல்தீப் யாதவ், அக்சர் படேல், லலித் யாதவ் ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர். இவர்கள் நடு ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினர். கூட்டாக இவர்கள் 11 ஓவர்களை வீசி 77 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் அனுஜ் ராவத்தின் அற்புதமான த்ரோவால் ரன் அவுட் ஆனார். மிட்செல் மார்ஷ் (0), வெய்ன் பார்னல் பந்தில் நடையை கட்டினார். யாஷ் துல்1 ரன்னில் மொகமது சிராஜ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். வார்னர் 19 ரன்களில் விஜய குமார் வைஷாக் பந்தில் கோலியிடம் பிடிகொடுத்தார். அபிஷேக் போரல் 5 ரன்னில் ஹர்ஷால் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். 53 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்து சரிவை நோக்கி பயணித்தது டெல்லி அணி.

எனினும் மணீஷ் பாண்டே, அக்சர் படேல் ஜோடி போராடியது. அக்சர் படேல் 14 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சேர்த்து வைஷாக் பந்தில் வெளியேறினார். மணீஷ் பாண்டே 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஹசரங்கா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இவர்களை தொடர்ந்து அமன் ஹக்கிம் கான் 18, லலித் யாதவ் 4 ரன்களில் நடையை கட்டினர். இறுதிக்கட்டத்தில் அன்ரிச் நோர்க்கியா 23, குல்தீப் யாதவ் 7 ரன்கள் சேர்த்தனர். எனினும் இது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

பெங்களூரு அணி தரப்பில் விஜயகுமார் வைஷாக் 3, மொகமது சிராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வானார். 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள பெங்களூரு 2 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் தொடர்ச்சியாக 5-வது தோல்வியை சந்தித்த டெல்லி அணி புள்ளிகள் கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் தொடர்கிறது.

மும்பை - கொல்கத்தா மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை 3 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை தோற்கடித்து இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x