Published : 02 Jul 2014 05:12 PM
Last Updated : 02 Jul 2014 05:12 PM

ஃபிஃபா 2014-ல் கோல்கீப்பர்கள் ஆதிக்கம்: 16 கோல்களை முறியடித்து அமெரிக்காவின் ஹோவர்டு சாதனை

'இது கோல்கீப்பர்களின் உலகக் கோப்பை' என்று சொல்லும் அளவுக்கு கோல்கீப்பர்களின் ஆதிக்கம் மிகுந்த ஃபிஃபா 2014-ல் அமெரிக்காவின் ஹோவர்டு அபார சாதனை படைத்துள்ளார்.

பெல்ஜியம் அணிக்கு எதிராக சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத, அசாத்திய கோல் கீப்பிங் செய்த அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டு 16 முறை கோல்களைத் தடுத்திருப்பது புதிய சாதனையாகியுள்ளது. 1966 உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு இதுதான் சாதனை. அதிலும் 16 தடுப்புகளும் நேருக்கு நேர் என்று கூறப்படும் உறுதியான கோல் வகையறாவைச் சேர்ந்தவை. டிம் ஹோவர்டிற்கு வயது 35!!

கிரிக்கெட்டில் எப்படி பேட்ஸ்மென்கள், அவர்கள் அடிக்கும் சிக்சர்கள், பவுண்டரிகள், நட்சத்திர வீரர்கள் என்று கவனம் குவியுமோ கால்பந்திலும் கோல்களை அதிகம் அடிக்கும் நெய்மார், மெஸ்ஸி, வான் பெர்சி, அர்ஜென் ராபின், தாமஸ் முல்லர், கொலம்பியாவின் ரோட்ரிகஸ், சுவிட்சர்லாந்தின் ஷகீரி என்று ரசிகர்களின் கவனம் குவிய, உண்மையான ஹீரோக்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல்கீப்பர்களே.

இந்த உண்மையின் முத்தாய்ப்புதான் அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹோவர்டின் இந்த புதிய சாதனை. பெல்ஜியம் கேப்டன் வின்செண்ட் கொம்பெனி வெற்றி பெற்ற பிறகு தனது ட்விட்டரில் உடனடியாகப் பதிவு செய்த வார்த்தை இதுதான்: "Two words.. Tim Howard=respect".

அமெரிக்க பயிற்சியாளர் கிளின்ஸ்மென் கூறுகையில், “டிம் ஹோவர்டின் ஆட்டம் ஒரு பெருநிகழ்வு” என்றார்.

நேற்று நடைபெற்ற அர்ஜென் டீனா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு எதிரான நாக்-அவுட் ஆட்டத்தில் சுவிஸ் கோல் கீப்பர் பெனாக்ளியோவின் அபார கோல்கீப்பிங் அர்ஜென் டீனாவின் கோல் போடும் முயற்சியைத் தொடர்ந்து முறியடித்து வந்தது. கடைசியில் அவரும் களைப்படைந்த நிலையில் கவனம் சிதறவே அந்த ஒரு கோலை தடுக்க முடியாது போனது. ஆனால் கடைசியில் எப்படியாவது சமன் செய்து விடும் முயற்சியில் சுவிஸ் கோல்கீப்பரே நடுக்களத்தில் வந்து நடுக்கள வீரராகக் களமிறங்கி ஆடியபோது அவரது தீவிரம் தெரியவந்தது. இந்தத் தீவிரம்தான் அவரது கோல்கீப்பிங்கிலும் பிரதிபலித்தது.

முதல் சுற்று ஆட்டத்தின்போது பிரேசில் - மெக்சிகோ அணிகள் மோதிய போட்டியில் மெக்சிகோ கோல்கீப்பர் ஒச்சா பெரிய ஹீரோவாகத் திகழ்ந்தார். அவர் அன்று குறைந்தது ஒரு 6 அல்லது 7 கோல்களையாவது முறியடித்திருப்பார்.

பிரேசில் கோல் கீப்பர் சீசர் அன்று சிலி அணிக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டில் அனைத்து சிலி ஷாட்களையும் சரியாக கணித்தார். 3 கோல்களை அவர் தடுத்தார்.

கிரீஸிற்கு எதிராக அன்று கோஸ்டா ரிகா நாக்-அவுட் சுற்றில் ஆடும்போது கோஸ்டா ரிகா கோல் கீப்பர் கெயலர் நவாஸ் தடுத்த சில கோல்களால் அந்த ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்குச் சென்றது. கடைசியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோலை அவர் தடுத்ததே அந்த அணிக்கு காலிறுதிக்கு முன்னேற வைத்தது. இதற்காக ஆட்ட நாயகன் விருதையும் அவர் பெற்றார்.

அதே போல் நைஜீரியாவின் கோல் கீப்பர் என்யீமா பிரான்ஸிற்கு எதிராக சில கோல்களை முறியடித்தார். ஆனால் கடைசியில் அவரே செய்த தவறினால் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆனாலும் அவர் அன்று செய்த கோல்கீப்பிங் பிரான்சின் நம்பிக்கையைக் குலைத்தது என்றே கூறவேண்டும்.

ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் பல அபாயங்களிலிருந்து ஜெர்மனி அணியை இந்த உலகக் கோப்பையில் காப்பாற்றியுள்ளார். கானா அணிக்கு எதிராக அவர் சில சேவ்களைச் செய்ததால் அந்த ஆட்டம் டிரா ஆனது. இல்லையெனில் ஒரு அதிர்ச்சித் தோல்வி முதல் சுற்றில் நிகழ்ந்திருக்கும்.

பிரேசிலுக்கு எதிராக மெக்சிகோ கோல் கீப்பர் ஒச்சாவ் நெய்மார் தலையால் முட்டிய பந்தை தடுத்தாட்கொண்டது இந்த உலகக் கோப்பையின் சிறந்த தடுப்பாக பேசப்பட்டது. நெய்மாரின் சக்தி வாய்ந்த தலை முட்டில் பந்து மேலாக கோல் நோக்கிச் செல்ல திடீரென ஒரு கை வந்து பந்தைச் சற்றும் எதிர்பாராதவிதமாகத் தட்டிவிட்டது. ஓச்சாவின் அந்தக் கை அன்று பிரேசிலுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.

ஆனால் அதை விடவும் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டின் 16 தடுப்பில் பல தடுப்பு நேருக்கு நேர் எதிர்கொண்ட ஷாட்களாகும், உறுதியான கோல் வாய்ப்புகளாகும் அவையனைத்தும்.

பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே பெல்ஜியம் காரனர் ஷாட்டை டிவோக் ஆரிஜி கோலாக மாற்றியிருப்பார் ஆனால் டிம் ஹோவர்ட் அதனை வெளியே தட்டி விட்டார்.

பிறகு 29வது நிமிடத்தில் எளிதாக ஒரு பந்தை தடுத்தாட்கொண்டார். 43வத் நிமிடத்தில் மீண்டும் டீ புருயின் அடித்த கார்னர் ஷாட்டை முட்டியால் தட்டி விட்டு சேவ் செய்தார் டிம் ஹோவர்ட்.

இடைவேளைக்குப் பிறகு 47வது நிமிடத்தில் கெவின் டீ புரூயின் மீண்டும் அமெரிக்க பெனால்டி பகுதிக்குள் பந்தை நுழைக்க, அங்கு டிரைஸ் மெர்டன்ஸ் அதனை கோலுக்குள் தலையால் அடித்தார். ஆனால் டிம் ஹோவ்ர்ட் பல அடி தூரம் எம்பி பந்தை பாருக்கு மேல் தட்டி விட்டார்.

76வது நிமிடத்தில் ஆரிஜி அடித்த பாஸை கெவின் மிரலாஸ் கோலாக மாற்ற முயற்சிக்க மீண்டும் ஹோவர்ட் அதனை தடுத்து விட்டார்.

78வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்ட் அடித்த ஷாட்டை இடது புறம் தாழ்வாக டைவ் அடித்து ஹோவர்ட் மீண்டும் ஒரு அசாத்திய தடுப்பை நிகழ்த்தினார். கூடுதல் நேரத்திலும் சில கோல்களை முறியடித்தார் ஹோவர்ட்.

மீண்டும் 84வது நிமிடத்தில் ஆரிஜி அடித்த ஷாட்டை கோல் போஸ்டிற்கு மேல் தட்டி விட்டு கோலை முறியடித்தார். அதன் பிறகுதான் லுகாக்உ களமிறங்க சுமார் 100 நிமிட தடுப்பாட்டத்தினால் களைப்படைந்த ஹோவர்ட் 2 கோல்களை விடுகிறார்.

காலிறுதி ஆட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில் நாம் ஸ்ட்ரைக்கர்கள் மீதான கவனக்குவிப்பை இனி கோல்கீப்பர்கள் பக்கம் திருப்பலாமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x