இஷாந்த் சர்மாவின் வீழ்ச்சிக்கு வெங்கடேஷ் பிரசாத் காரணம்: பயிற்சியாளர் ஷர்வண் குமார்

இஷாந்த் சர்மாவின் வீழ்ச்சிக்கு வெங்கடேஷ் பிரசாத் காரணம்: பயிற்சியாளர் ஷர்வண் குமார்
Updated on
1 min read

இஷாந்த் சர்மா பந்துவீச்சில் வீழ்ச்சி ஏற்பட முன்னாள் இந்திய பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் முழு காரணம் என்று அவரது முந்தைய பயிற்சியாளரான ஷர்வண் குமார் சாடியுள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் பவுன்சர் வீசத் தொடங்கிய இஷாந்த் சர்மா மொயீன் அலிக்கு காட்டு பவுன்சர் ஒன்றை வீச அவர் ஷாட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பிறகு முழுக்க முழுக்க பவுன்சரிலேயே இங்கிலாந்தைச் சாய்த்த இஷாந்த் சர்மா தனது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சை வீசி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த நிலையில் இஷாந்த் சர்மாவின் ஆரம்பகால பயிற்சியாளர் ஷர்வண் குமார் கூறும்போது, “இஷாந்த் சர்மா வேகமாக வீசக்கூடியவர், அவரை லைன் அண்ட் லெந்த் பவுலராக மாற்றியது வெங்கடேஷ் பிரசாத். இதனால் ஒரு நேரத்தில் வேகத்தின் மீதான அவரது பரிச்சயம் போய் விட்டது. வேகம் போனதால் அவரது பந்து வீச்சு ஆக்சனும் தவறானது.தோள்பட்டை தொங்கத் தொடங்கியது, மணிக்கட்டு நிலையும் தவறாகப் போனது. இதனால் அவரது தன்னம்பிக்கை போய்விட்டது.

இங்கிலாந்து செல்லும்போது நான் இஷாந்த் சர்மாவிடம் கூறியது என்னவெனில், பந்துவீச்சின் போது மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும், சாய்வாக இருக்கக் கூடாது, மேலும் பந்துவீச்சின் இறுதிக் கட்டத்தில் சற்றே மார்பு நேராக இருக்கிறது, இது கூடாது கொஞ்சம் பக்கவாட்டாக இருந்தால்தான் வேகம் கூடும், இவ்வாறு சில ஆலோசனைகளை வழங்கினேன்.

ஜோ டேவிஸும் இஷாந்த் சர்மாவுடன் இணைந்து பணியாற்றினார். இஷாந்த் சர்மா, ஒருநாள் கிரிக்கெட், இருபது ஓவர், டெஸ்ட் என அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக வீச வேண்டும் என்று நினைப்பவர், ஆனால் சில நேரங்களில் ஒருநாள் போட்டிகளிலிருந்து அவரை நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது அவரை சில சமயங்களில் உடைந்து போகச் செய்து விடுகிறது.

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் சன் ரைசர்ஸ் அணி இஷாந்த் சர்மாவை சில போட்டிகளில் சேர்க்காமலேயே ஆடியது. இது அவரை உசுப்பேற்றியது.

ஆகவே உள்நாட்டு அணியில் இந்தியப் பவுலரான தன்னை உட்கார வைக்கும்போது அவரது தன்மானம் எழுச்சியுற்று தான் யார் என்று காண்பிக்க வேண்டிய நிர்பந்தமும், வேகமும் ஏற்படுகிறது.

மணிக்கு 135-140 கிமீ வேகத்தில் வீசும்போது அவரது பிழைகள் அனைத்தும் சரியாகி விடுகிறது. லார்ட்ஸ் டெஸ்ட் இஷாந்திற்கு திருப்பு முனையாக அமையும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்” என்றார் அவர்.

இஷாந்த் சர்மா கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 3 முறை 5 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்பு 53 இன்னிங்ஸ்களில் 3 முறையே 5 விக்கெட்டுகளை இஷாந்த் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in