

பெங்களூரு: தனிப்பட்ட மைல்கல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலியை விமர்சித்திருந்தார் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சைமன் டவ்ல். அதற்கு தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் கோலி.
“ஒரு ரயிலை போல கோலி தனது ஆட்டத்தை தொடங்கினார். நிறைய ஷாட்ஸ் ஆடி அமர்க்களம் செய்தார். 42 முதல் 50 ரன்கள் எடுக்க பத்து பந்துகளை எடுத்துக் கொண்டார். இது மைல்கல் சாதனை சார்ந்த அக்கறைதான். இந்த வகை ஆட்டத்தில் அதுமாதிரியான ஆட்டத்திற்கு இடமில்லை என நான் நினைக்கிறேன். தொடர்ந்து ரன் குவிக்க வேண்டும்” என வர்ணனையில் சைமன் டவ்ல் சொல்லியிருந்தார்.
லக்னோ அணிக்கு எதிராக பெங்களூரு விளையாடியபோது 34 பந்துகளில் 42 ரன்களை சேர்த்திருந்தார் கோலி. இது பவர்பிளே ஓவர்களில் அவர் எடுத்த ரன்கள் ஆகும். அதன் பின்னர் தனது இன்னிங்ஸில் வேகத்தை கோலி குறைத்திருந்தார். இந்தச் சூழலில் ஜியோ சினிமாவில் கோலி பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “டி20 கிரிக்கெட்டில் ஆங்கர் ரோல் மிகவும் அவசியம். ஆட்டத்தின் கள சூழலில் அவர்கள் இல்லாததால் பலரும் அதை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். பவர்பிளே ஓவர்கள் முடிந்ததும் சிலருக்கு பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதுபோல தெரியும். ஆனால், பவர்பிளே ஓவர்களில் நீங்கள் விக்கெட்டை இழக்கவில்லை என்றால் எதிரணியின் சிறந்த வீரர் பந்துவீச வருவார். அந்தச் சூழலில் அவர்கள் வீசும் முதல் இரண்டு ஓவர்களில் என்ன செய்ய முடியும் என பார்க்க வேண்டும். அதைச் செய்தால் கடைசி இரண்டு ஓவர்களில் ரன் குவிக்கலாம்” என கோலி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 20-வது லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.