Last Updated : 28 Apr, 2014 10:00 AM

 

Published : 28 Apr 2014 10:00 AM
Last Updated : 28 Apr 2014 10:00 AM

சென்னை லீக் கால்பந்து: ஈகிள்ஸுக்கு 4-வது தோல்வி

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் தலைமைக் கணக்காளர் அலுவலக மனமகிழ் மன்ற (ஏஜிஓஆர்சி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் ஏஜிஓ அணி 3-வது வெற்றியைப் பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் ஈகிள்ஸ் அணிதான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.

சென்னை நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஏஜிஓ அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடது மிட்பீல்டில் இருந்து பந்தை கடத்தி வந்த ஸ்டிரைக்கர் ரீகன், கோல் கம்பத்துக்கு ‘கிராஸ்’ செய்தார். அப்போது முன்னேறி வந்த மற்றொரு ஸ்டிரைக்கர் சுதாகர் கோலடிக்க முயற்சிக்க, அவருடைய முழங்காலில் பட்ட பந்து, கோல் கம்பத்துக்கு மேலே பறந்தது.

ஏஜிஓ அணி கோலடிக்க தொடர்ந்து முயற்சித்த நிலையில், 22-வது நிமிடத்தில் ஈகிள்ஸ் வலது பின்கள வீரர் கவியரசன், ரீகனை கீழே தள்ள பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திய நவீன் குமார் அதிரடியாக கோலடித்தார்.

தன்னால் எதிரணிக்கு கோல் கிடைத்ததை ஈடு செய்யும் வகையில் விளையாடிய கவியரசன், வலது புறத்தில் சுமார் 30 யார்ட் தூரத்தில் இருந்து துல்லியமாக பந்தை கோல் கம்பத்துக்கு அனுப்ப, அதை ஏஜிஓ கோல் கீப்பர் அலெக்சாண்டர் சேவ் செய்தார். கவியரசனின் மற்றொரு ‘கிராஸ்’ வாய்ப்பை ஸ்டிரைக்கர் ஜெர்ரிபே வீணடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஏஜிஓ 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் மெர்லின் கொடுத்த ‘பாஸை’ மிக எளிதாக கோலாக்கினார் ரீகன். இதன்பிறகு கடைசி வரை ஈகிள்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியபோதும், அந்த அணியின் ஜெர்ரிபே நிறைய வாய்ப்புகளை வீணடித்தார். அந்த அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் தேவிந்தர் சிங் உதைத்த பந்தை ஏஜிஓ கோல் கீப்பர் தகர்த்தார். 85-வது நிமிடத்தில் வண்டாலா சேனா கொடுத்த ‘பாஸில்’ மைக்கேல் கோலடிக்க, ஈகிள்ஸின் தொடர் போராட்டதுக்கு முதல் கோல் கிடைத்தது. இதன்பிறகு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த அணியால் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் ஏஜிஓ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

ரீகன் சஸ்பெண்ட்

இந்த ஆட்டத்தின்போது ஏஜிஓ ஸ்டிரைக்கர் ரீகன், ஈகிள்ஸ் வீரர் சோலைமலை இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் ‘யெல்லோ கார்டு’ கொடுக்கப்பட்டது. ரீகன் முந்தைய ஆட்டத்தில் ஒரு ‘யெல்லோ கார்டு’பெற்றிருந்தார். சென்னை லீக்கில் 2 ‘யெல்லோ கார்டு’ பெறும் வீரருக்கு ஓர் ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்படும். அதன்படி ரீகன் அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாது.

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் போட்டியில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன்-எஸ்பிஐ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x