Published : 14 Apr 2023 07:48 AM
Last Updated : 14 Apr 2023 07:48 AM

IPL 2023 | நடு ஓவர்களில் பந்துகளை வீணடித்ததே தோல்விக்கு காரணம்: சிஎஸ்கே கேப்டன் தோனி வருத்தம்

தோனி | கோப்புப்படம்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இந்த தோல்விக்கு நடு ஓவர்களில் பந்துகளை வீணடித்ததே காரணம் என அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 176 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கேப்டன் எம்.எஸ்.தோனி 17 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய போதிலும் கடைசி பந்தில் வெற்றிக்கான சிக்ஸரை அவரால் அடிக்க முடியாமல் போனது. இந்த ஆட்டத்தின் விதியை 7 முதல் 15 ஓவர்களுக்கு இடையிலான காலகட்டம்தான் தீர்மானித்தது.

இந்த நேரத்தில் டேவன் கான்வே 38 பந்துகளில் 50 ரன்களும், ஷிவம் துபே 9 பந்துகளில் 8 ரன்களும், மொயின் அலி 10 பந்துகளில் 7 ரன்களும் சேர்த்தனர். இவர்கள் 3 பேரும் ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோரது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பெரிய அளவில் மட்டையை சுழற்றவில்லை. போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது:

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் அதிகம் கைகொடுக்கவில்லை. ஆனால் நடு ஓவர்களில் அதிக பந்துகளில் ரன்கள் சேர்க்காமல் விட்டுவிட்டோம். ஆடுகளத்தில் பந்துகள் நின்று வந்தாலும், திரும்பினாலும் பரவாயில்லை. ஆனால் இங்கே அப்படி ஒன்றும் நடைபெறவில்லை. நானும், ஜடேஜாவும் தான் பேட்டிங்கில் கடைசி ஜோடி.

தொடரின் தொடக்கத்திலேயே நிகர ரன்ரேட்டை மனதில் வைத்து கடினமாக செல்ல முடியாது. நடு ஓவர்களில் நாங்கள் மெதுவாகவே விளையாடினோம். அந்த நேரத்தில் அதிக சிங்கிள்ஸ் எடுத்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் பந்துவீச்சாளர் மேற்கொள்ளும் தவறுக்காக காத்திருப்பேன். கடைசி ஓவரில் பந்து வீச்சாளர் அழுத்தத்தில் இருந்தார். எனது பலம் நேர்திசையில் பந்தை விளாசுவதுதான். 2-வது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு அதிகம் இருந்தது. முதல் சில ஓவர்களுக்குப் பிறகு, அது ஒப்பீட்டளவில் எளிதாகிவிட்டது. நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மைல் கல் சாதனையை ( கேப்டனாக 200 போட்டிகளில் விளையாடியது) பெரிய அளவில் கருத்தில் கொள்வது இல்லை. அது 199 ஆக இருந்தாலும் சரி 200 ஆட்டங்களாக இருந்தாலும் சரி. 200 போட்டிகளில் விளையாடுவது பாராட்டுக்குரியதுதான். இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் சிறப்பு ஒன்றும் இல்லை என்றுதான் கூறுவேன்’’ என்றார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்போது, “எங்களது பந்து வீச்சாளர்கள் இறுதிகட்டத்தில் அமைதி காத்து சிறப்பாக செயல்பட்டனர். கேட்ச்களை சிறப்பாக எடுத்தோம். சேப்பாக்கத்தில் எனக்கு நல்ல நினைவுகள் இல்லை, இங்கு வெற்றி கண்டதும் இல்லை, இதனால் வெற்றி பெற விரும்பினேன். கடைசி இரு ஓவர்களும் பதற்றமாக இருந்தது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x