

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.
கடைசிப் பந்தை தாழ்வாக செல்லும் வகையில் லோ ஃபுல்-டாஸாக வீசி இருந்தார் ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் படேல். அந்த பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த லக்னோ வீரர் ஆவேஷ் கான் மிஸ் செய்தார். பந்து ஸ்டம்பை தகர்க்கத் தவறியது. இருந்தும் ரன் எடுக்க ஓட்டம் பிடித்தனர் லக்னோ வீரர்கள். அதே நேரத்தில் அதை தடுக்கும் வகையில் பந்தை பற்றியவுடன் ஸ்டம்பை தகர்க்கும் நோக்கில் வலது கையில் அணிந்திருந்த கையுறையை நீக்கி இருந்தார் ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.
இருந்தும் சரியான நேரத்தில் அவர் பந்தை பற்றி ஸ்டம்புகளை தகர்க்க தடுமாறினார். அந்த நேரத்திற்குள் ஒரு ரன்னை எடுத்து முடித்தனர் லக்னோ அணியின் ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான். தினேஷ் கார்த்திக்கின் இந்த மோசமான செயல்பாடு குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டினர். அவர் அதை சரியாக செய்திருந்தால் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்திருக்கும். அந்த ஒரு ரன்னையும் எடுத்திருக்காது. ஆட்டம் சூப்பர் ஓவர் வரை நகர்ந்திருக்கும்.
அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் இந்த தோல்விக்கு தினேஷ் கார்த்திக் மட்டுமே காரணம் அல்ல என சில ரசிகர்கள் சொல்வதையும் பார்க்க முடிகிறது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிய தருணத்தில் விக்கெட்டை இழந்த டிகே என ரசிகர்கள் அவரது சொதப்பல்களை தற்போது ஹைலைட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. கோலி, டூப்ளசி மற்றும் மேக்ஸ்வெல் என மூவரும் அரைசதம் கடந்து அசத்தியிருந்தனர். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. மேயர்ஸ், தீபக் ஹூடா மற்றும் க்ருனல் பாண்டியா என மூவரும் விரைந்து விக்கெட்டை இழந்தனர். ஸ்டாய்னிஸ், 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் ராகுலும் 18 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் பதோனி இணையர் அபாரமாக ஆடினர். பூரன், 19 பந்துகளில் 62 ரன்களை சேர்த்தார். 17 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை எடுத்திருந்தது லக்னோ. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவரில் 24 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19-வது ஓவரில் பதோனி, ஹிட் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். ஒரு வழியாக வெற்றிக்கான ரன்களை போராடி எடுத்தனர் அந்த அணியின் டெயில் எண்ட் பேட்ஸ்மேன்கள்.