Published : 10 Jul 2014 10:08 PM
Last Updated : 10 Jul 2014 10:08 PM

புவனேஷ் குமார், மொகமது ஷமி அரைசதம்: இந்தியா 457 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளான இன்று கடைசி விக்கெட்டுக்காக புவனேஷ் குமார், மொகமது ஷமி இணைந்து 111 ரன்களைச் சேர்க்க இந்தியா முதல் இன்னிங்ஸில் 457 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

உணவு இடைவேளையின் போது 342/5 என்று இருந்த இந்தியா உணவு இடைவேளைக்குப் பின் மடமடவென தோனி, ஜடேஜா, பின்னி, இஷாந்த் சர்மா விக்கெட்டுகளை இழந்து 346/9 என்று ஆனது.

அப்போது இணைந்த புவனேஷ், ஷமி ஜோடி அருமையாக ஆடியது. உண்மையில் ஷிகர் தவான், புஜாராவுக்கெல்லாம் இல்லாத பொறுமையுடன் இவர்கள் ஆடினர். பிட்சில் ஒன்றுமில்லை என்பது வேறு விஷயம் ஆனால் இந்தியாவின் டெய்ல் எண்டர்கள் பெரிய அச்சுறுத்தலை சமீப காலங்களில் ஏற்படுத்தியதில்லை.

இவர்கள் இருவரும் சேர்ந்து 111 ரன்களை கடைசி விக்கெட்டுக்காக சேர்த்தது குக்கின் கேப்டன்சி "திறமையை" வாசிம் அக்ரமிடமிருந்து கடும் கிண்டல் விமர்சனங்களைக் கிளப்பியதே மிச்சம். சிலி மிட் ஆன், அவர் பக்கத்தில் இன்னொரு வீரர், அவருக்கும் அருகே இன்னொரு வீரர் என்று ஃபீல்டிங் நிறுத்தியதை வாசிம் அக்ரம் கடுமையாக கேலி செய்தார். இது போன்ற ஃபீல்டிங் அமைப்பை தான் இதுவரைக் கண்டதில்லை என்றார்.

பவுலர்களை அழைத்து ஏதாவது வித்தியாசமாகச் செய்யச் சொல்வதை விடுத்து விசித்திரமான நகைப்புக்குரிய கள அமைப்பை குக் மேற்கொண்டார் என்று வாசிம் அக்ரம் தேநீர் இடைவேளைக்கான பிரேக்கில் கூறினார்.

புவனேஷ் குமார் அவ்வப்போது சில நல்ல ஷாட்களையும் ஆடினார். மொயின் அலி பந்தை சற்றே ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் அடித்த பவுண்டரியைக் குறிப்பிடலாம் அதே போல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை லாங் ஆனில் தூக்கி அடித்த ஷாட்டையும் குறிப்பிடலாம்.

மொகமது ஷமி கடைசியில் ஆண்டர்சன் பந்தைத் தூக்கி சைட் ஸ்க்ரீனுக்கு மேலாக சிக்சர் அடித்து அரைசதம் எடுத்தார். ஜோடி சேர்ந்து எடுத்த ரன்களும் 100-ஐ எட்டியது. புவனேஷ் குமார் 149 பந்துகளைச் சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். ஷமி 81 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும்.

நம்பர் 10, 11 வீரர்கள் இருவரும் அரைசதம் எடுத்தது இதற்கு முன் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்ந்திருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும்.

முன்னதாக சதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த தோனி 82 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் அபாரமான நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். அதே ஓவரில் ஸ்டூவர்ட் பின்னி ஸ்டோக்சின் பந்தை தேவையில்லாமல் ஆடி 1 ரன்னில் அவுட் ஆனார். ஜடேஜா 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 25 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் வீசிய ஆடாமல் விடக்கூடிய பந்தை அடிக்க நினைத்து கேட்ச் கொடுத்தார்.

350 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருக்க வேண்டிய இந்திய அணியை மொகமது ஷமி, புவனேஷ் குமார் ஆகியோர் மிகவும் நிதானமாக ஆடி 457 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

இங்கிலாந்து சற்று முன் அலிஸ்டர் குக் விக்கெட்டை இழந்தது. மொகமட் ஷமி வீசிய பந்தை ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு பிளிக் செய்ய முயன்றார் ஆனால் அவரது லெக்ஸ்டம்ப் தெரிந்தது. பந்து மட்டையில் சிக்காமல் பவுல்டு ஆனது. தொடர்ந்து அவர் நகர்ந்து ஆடி லெக் ஸ்டம்பை காண்பித்ததை ஷமி பயன்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது.

சாம் ராப்சன், கேரி பாலன்ஸ் ஆடி வருகின்றனர். இன்று இன்னமும் 12 ஓவர்கள் மீதமுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x