

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 பந்துகளில், 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங். அதிலும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிங்கு சிங், ஒரே இரவில் கிரிக்கெட் உலகம் முழுவதும் அறிந்த நபராகிவிட்டார்.
புகழின் உச்சிக்கு சென்றுள்ள ரிங்கு சிங்கிற்கு அந்த உயரத்தை அடைவதற்கான பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. அலிகாரை சேர்ந்த ரிங்கு சிங்குவின் குடும்பம் 7 உறுப்பினர்களை கொண்டது. அவரது தந்தை கான்சந்த், வீடு வீடாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஏதேனும் வேலை செய்ய வேண்டியது இருந்தது.
இந்த வகையில் ரிங்கு சிங் தனது குடும்பத்திற்கான பங்களிப்பை வழங்க சிறு வயதிலேயே பயிற்சி மையம் ஒன்றில் தரையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளராக வேலை பார்த்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் இருந்தாலும் கிரிக்கெட் மீது தனக்கு இருந்த ஆர்வத்தையும், முயற்சியையும் கைவிடவில்லை. உத்தரபிரதேசத்தின் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணித் தேர்வுக்கு இரு முறை சென்றார். ஆனால் இரு முறையும் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை.
தொடர்ந்து 2012-ம் ஆண்டு விஜய் மெர்சண்ட் டிராபி தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய ரிங்கு சிங் 154 ரன்கள் விளாசினார். பிசிசிஐ தொடர்களில் இதுபோன்று கடினமாக உழைத்தால் உயரடுக்கு போட்டிகளில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை ரிங்கு சிங்குவுக்கு கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்களில் உத்தரபிரதேசத்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்வானார். பின்னர் உத்தர பிரதேசத்தின் ஒருநாள் போட்டிக்கான அணியில் நேரடியாக இடம் பெற்றார். அங்கிருந்து அவருக்கு அனைத்தும் ஏறுமுகமாகவே அமைந்தது.
பின்னர் 2017-ம் ஆண்டில் அவரது செயல்பாடுகளை கவனித்த பஞ்சாப் அணி ஐபிஎல் தொடருக்காக ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அடுத்த ஆண்டு அவரை கொல்கத்தா அணி ரூ.80 லட்சத்துக்கு வாங்கியது. சில சீசன்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சீசனில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பிரகாசித்தார். இந்த சீசனில் ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விளையாடாததால் ரிங்கு சிங்கிற்கு தொடக்கத்தில் இருந்தே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை தற்போது அபாரமான முறையில் பயன்படுத்திக் கொண்டதுடன் ஐபிஎல் வரலாற்றில் தனது முத்திரையை வலுவாக பதித்துள்ளார்.
ரிங்கு சிங் கூறும்போது, “படிப்பில் நான் சிறந்தவனாக இருந்தது இல்லை. கிரிக்கெட் தான் என்னை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். கிரிக்கெட் எனது விருப்பங்களில் ஒன்று இல்லை. அதுமட்டுமே எனது விருப்பம். எங்களை வளர்க்க என் தந்தை மிகவும் போராடினார். மைதானத்துக்கு வெளியே நான் அடித்த ஒவ்வொரு ஷாட்டையும் எனக்காக தியாகம் செய்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
கிளப் போட்டிகளில் விளையாடுவதற்கான லெதர் பந்து வாங்குவதற்கு கூட எனது பந்தை பணம் கொடுக்கமாட்டார். ஒருமுறை நான் கான்பூருக்கு விளையாடச் சென்றேன். அப்போது எனது செலவுக்காக எனது தாய், உள்ளூர் மளிகைக்கடையில் ரூ.1000 கடன் வாங்கினார். எனது சகோதரர்கள் அனைவருமே தந்தையிடம் அடி வாங்கி உள்ளனர். அவரால் சிலிண்டர் விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலைகளில் அந்த பணியை நாங்கள் செய்து முடிக்க வேண்டும். பணியை செய்து முடிக்கும் வரை குச்சியுடன் வீட்டு முன் அமர்ந்திருப்பார்.
ஒரு முறை பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் நான் தொடர் நாயகனாக தேர்வானேன். அப்போதுதான் எனது தந்தை என்னை பார்க்க முதன்முறையாக மைதானத்திற்கு வந்திருந்தார். அவருக்கு முன்னால் எனக்கு ஒரு பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு அவர் என்னை அடிப்பதற்கு கையை ஓங்கியது இல்லை" என ரிங்கு சிங் கூறினார்.