Published : 10 Apr 2023 01:42 PM
Last Updated : 10 Apr 2023 01:42 PM

நல்ல பிட்ச் கூட இல்லாத இடத்திலிருந்து வந்த ‘5 சிக்ஸ் ஹீரோ’ ரிங்கு சிங்- சுவையான தகவல்கள் சில

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் போட்டி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்த போட்டியாகும். ஏனெனில் எந்த அணியும் 205 ரன்கள் இலக்கை இவ்வளவு சீரியஸாக ச்ஸே செய்தது இல்லை. ஏதோ வருவார்கள் அடிப்பார்கள், அவுட் ஆவார்கள், கடைசியில் வாய்ப்பிருந்தால் முயல்வார்கள், ஆனால் கொல்கத்தா நேற்று தொடக்கத்திலிருந்தே சேசிங்கை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் மிக பிரமாதமாக, சீரியசாக சேஸ் செய்தனர், அதனால்தான் இந்த ஆட்டம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

இரண்டு தமிழக வீரர்களான விஜய் சங்கர், சாய் சுதர்ஷன் குஜராத் டைட்டன்ஸுக்காக பேட்டிங்கில் கலக்க ஆப்கான் சூப்பர் ஸ்பின்னர் ரஷீத் கான் ஹாட்ரிக்கும் பயனற்று போக கொல்கத்தா அணியின் உத்தரப்பிரதேச வீரர் ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி கொல்கத்தாவை தோல்வியின் பிடியிலிருந்து வெற்றி வாகைக்கு அழைத்துச் சென்றார்.

முன்னதாக இன்னொரு தமிழக வீரரான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெங்கடேஷ் அய்யர் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசி 83 ரன்களை விளாசி உண்மையில் இம்பாக்ட் பிளேயர் ரோலை கனக் கச்சிதமாக செய்தார். இவருடன் கேப்டன் நிதிஷ் ராணா 29 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 45 ரன்களைச் சேர்க்க இருவரும் சேர்ந்து 100 ரன்களை 55 பந்துகளில் விளாசித்தள்ள கொல்கத்தா வெற்றிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஆனால் வெங்கடேஷ் அய்யர் 16வது ஓவரில் ஜோசப்பிடம் ஆட்டமிழக்க மினி சரிவு ஏற்பட்டது. ரஸல், சுனில் நரைன், முதல் போட்டி நாயகன் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை 17வது ஓவரின் முதல் 3 பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார் ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான். ஆனால் அதற்கு முன்பு வரை வெங்கடேஷ் அய்யரும், நிதிஷ் ராணாவும் புரட்டி எடுத்ததென்னவோ உண்மை.

கடைசி 8 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்ட போதுதான் ரிங்கு சிங் எழுச்சி கண்டார். அதுவரை அவர் 14 பந்துகளில் 8 ரன்கள்தான் எடுத்திருந்தார். ஜோஷ் லிட்டில் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தையும் 6வது பந்தையும் சிக்ஸ், பவுண்டரி அடித்து கடைசி ஓவரில் 29 தேவை என்ற நிலைக்கு முன்னேற்றினார்.

20வது ஓவரைக் கொண்டு போய் யாஷ் தயாலிடம் கொடுத்த மடத்தனத்தை என்னவென்று சொல்வது? முதல் பந்து உமேஷ் யாதவ் ஆடினார், அவருக்கு சிங்கிள் கொடுத்தார். அங்கு அவர் விக்கெட்டை எடுத்திருந்தால் ஆட்டம் இப்படிப் போயிருக்காது. ஆகவே கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவை, ரிங்கு சிங் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். முதலில் அல்வா ஃபுல்டாஸ் லாங் ஆஃபில் சிக்ஸ். அடுத்து லெக் ஸ்டம்பில் லோ ஃபுல்டாஸ், டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ். மீண்டும் ஒரு புல்டாஸ் இம்முறை லாங் ஆஃபில் சிக்ஸ். (உஷ் கண்டுக்காதீங்க தருணம்), அடுத்த பந்து மரண ஷார்ட் பிட்ச் பந்து லாங் ஆன் மேல் சிக்ஸ். மீண்டும் ஒரு ஷார்ட் பந்து இதுவும் லாங் ஆன் மேல் சிக்ஸ். நடக்க முடியாததை சாதித்து விட்டார் ரிங்கு சிங். ஒரே நாள் இரவில் ஹீரோவானார் ரிங்கு.

21 பந்துகளைச் சந்தித்த ரிங்கு சிங் 1 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 48 நாட் அவுட் என்று ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

ரிங்கு அடிப்பது முதல் முறையல்ல: இதற்கு முன்னதாக 4 பேட்டர்கள் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை விளாசியுள்ளனர். 2012-ல் கிறிஸ் கெயில் ராகுல் ஷர்மா ஓவரில் 5 சிக்சர்களைத் தொடர்ச்சியாக விளாசியுள்ளார். 2020-ல் இப்போதைய குஜராத் வீரர் ராகுல் திவேத்தியா மே.இ.தீவுகளின் ஷெல்டன் காட்ரெலை ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசினார். 2021-ல் ஹர்ஷல் படேல் ஜடேஜாவிடம் சிக்கி 5 சிக்சர்கள் விளாசப்பட்டார். இப்போது ரிங்கு சிங்.

இதோடு கடைசி ஓவரில் 31 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற முதல் அணியாக திகழ்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ரிங்கு சிங்கின் பின்னணி: ரிங்கு சிங் அக்டோபர் 12, 1997-ல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். இப்போது இவருக்கு வயது 25. உ.பி. அணிக்கு முதல்தரக் கிரிக்கெட்டை ஆடியவர் இவர். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியுள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டில் 40 போட்டிகளில் 2875 ரன்களை 59.89 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 163. ஏழு சதங்கள் 19 அரைசதங்கள்.

லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் 50 ஆட்டங்களில் 1749 ரன்களை 53 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 1 சதம் மற்றும் 16 அரைசதங்கள் எடுத்துள்ளார். ஆக சிகப்புப் பந்து கிரிக்கெட்டிலும் 50க்கும் மேல் சராசரி, ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஐம்பதுக்கும் மேல் சராசரி. டி20-யில் 78 போட்டிகளில் 1392 ரன்கள் எடுத்துள்ளார். சிகப்புப் பந்து அறிமுகப்போட்டியிலேயே முதல் இன்னிங்சில் அரைசதம் 2வது இன்னிங்ஸில் 43 நாட் அவுட். லிஸ்ட் ஏ அறிமுகப் போட்டியிலேயே விதர்பாவுக்கு எதிராக 83 ரன்களைக் குவித்தார். டி20 அறிமுகப் போட்டியிலும் விதர்பாவுக்கு எதிராக 5 பந்துகளையே சந்தித்து 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் எடுத்துள்ளார். ஆகவே சிறந்த பினிஷிங் திறமை கொண்ட வீரர்தான் ரிங்கு சிங்.

இவரைப்பற்றி முன்னாள் இந்திய தொடக்க வீரர் தீப் தாஸ் குப்தா கூறும்போது, “ஒரு நல்ல பிட்ச் கூட இல்லாத பகுதியிலிருந்து வந்தவர்தான் இந்த ரிங்கு சிங். அவரது ஆரம்ப காலத்தில் ஒழுங்கமைவான கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. மிகவும் சாதாரண பின்னணியிலிருந்து நல்ல பிட்ச் கூட இல்லாத இடத்திலிருந்துதான் ரிங்கு வந்திருக்கின்றார். இந்தப் போட்டியில் ஆக்ரோஷ ஹிட்டிங்கைப் பார்த்தோம் ஆனால் அன்று ஷர்துல் அடிக்க ரிங்கு சிங் பொறுமையாக ஆடி கடைசியில் அடித்தார், ஆகவே அவரிடம் இருபுடைத் திறன் உள்ளது”- என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x