

மும்பை: சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ’வீ வான்ட் தோனி’ என குரல் எழுப்பிய வீடியோ வைரலானது.
ஐபிஎல் போட்டியின் பரம எதிரிகளாக சென்னையும் - மும்பையும் கருதப்படுகின்றனர்.
இதில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதியதால் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 158 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய சென்னை அணியில் கான்வே, கெய்க்வாட் ஓப்பனிங் செய்தனர். ஆனால் முதல் ஓவரிலேயே கான்வேயை பூஜ்யத்தில் வெளியேற்றினார் பெஹ்ரன்டோர்ஃப். இதன்பின் ஒன்டவுன் வீரராக களம்புகுந்தார் சீனியர் வீரர் அஜிங்கியா ரஹானே. இந்த சீசனில் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ரஹானே, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
ஒருகட்டத்தில் ரஹானே ஆட்மிழக்க துபே - கெய்க்வாட் இணை ஜோடி சேர்ந்து பொறுமையாக ரன்களை சேர்த்தனர். இதில் துபே அவுட் ஆக அடுத்து தோனிதான் இறங்க வேண்டும் என ’வீ வான்ட் தோனி’ என ரசிகர்கள் குரல் எழுப்பினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
துபே ஆட்டமிழந்ததை தொடர்ந்து ராயுடு இறங்கி, கெய்க்வாட்டுடன் இணைந்து சென்னை அணிக்கு வெற்றி பெற்று தந்தார்.