Published : 09 Apr 2023 05:22 AM
Last Updated : 09 Apr 2023 05:22 AM
குயின்ஸ்டவுன்: இலங்கைக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி.
நியூஸிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. குஷால் மெண்டிஸ் 48 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசினார். குஷால் பெரேரா 31, பதும் நிஷங்கா 25, தனஞ்ஜெயா டி சில்வா 20 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து தரப்பில் பென் லிஸ்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
183 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான டிம் ஷெய்பர்ட் 48 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் விளாசி பிரமோத் மதுஷன் பந்தில் ஆட்டமிழந்தார். ஷாட் போவ்ஸ் 17, கேப்டன் டாம் லேதம் 31 ரன்களில் வெளியேறினர். லகிரு குமரா வீசிய கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவையாக இருந்தது.
முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய மார்க் சாப்மேன் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். சாப்மேன் 16 ரன்கள் சேர்த்தார். வைடாக வீசப்பட்ட அடுத்த பந்தில் ரன் ஓடும் முயற்சியில் ஜேம்ஸ் நீஷாம் (0) ரன் அவுட் ஆனார். 3-வது பந்தை தூக்கி அடித்து டேரில் மிட்செல் (15) ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 3 ரன்கள் என்றநிலையில் 4-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தை லகிரு குமரா ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீச அதை ராச்சின் ரவிந்திரா டீப் பாயிண்ட், டீப் தேர்டுமேன் ஆகியவற்றுக்கு இடையே தட்டிவிட்டு 2 ரன்களை ஓடி எடுக்க நியூஸிலாந்து அணி 19.5 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ராச்சின் ரவீந்திரா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியானது 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஆட்டத்தில் இலங்கை அணிசூப்பர் ஓவரில் வெற்றி கண்டிருந்தது. 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது. ஆட்ட நாயகன், தொடர்நாயகனாக டிம் ஷெய்பர்ட் தேர்வானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT