Published : 08 Apr 2023 10:59 PM
Last Updated : 08 Apr 2023 10:59 PM
மும்பை: 16-வது ஐபிஎல் சீசனின் 12 லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் மோதிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
158 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வழக்கம் போல கான்வே, கெய்க்வாட் ஓப்பனிங் செய்தனர். ஆனால் முதல் ஓவரிலேயே கான்வேவை பூஜ்யத்தில் வெளியேற்றினார் பெஹ்ரன்டோர்ஃப். இதன்பின் ஒன்டவுன் வீரராக களம்புகுந்தார் சீனியர் வீரர் அஜிங்கியா ரஹானே. இந்த சீசனில் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ரஹானே, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
வழக்கமாக கெய்க்வாட் தான் அதிரடி காட்டுவார். ஆனால் இன்று ரஹானே புகுந்து விளையாடினார். பெஹ்ரன்டோர்ஃப்பின் இரண்டாவது ஓவரில் சிக்ஸ் அடித்து பவுண்டரி கணக்கை துவங்கிய அவர், அர்ஷத் கான் வீசிய ஐந்தாவது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸ், 4 பவுண்டர்கள் உட்பட 23 ரன்கள் சேர்த்தார்.
இதன்பின்னும் அதிரடியை தொடர்ந்த ரஹானே, 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். பியூஸ் சாவ்லா ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்த அவர், 27 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்திருந்தார். 8வது ஓவரில் சாவ்லாவின் பந்தை தூக்கி அடிக்க முயல அது சூர்யகுமார் யாதவ் கைகளில் கேட்ச் ஆக, தனது இன்னிங்ஸை முடித்துக்கொண்டார்.
ரஹானே அவுட்டுக்கு பிறகு கெய்க்வாடும், ஷிவம் துபே பெரிய ஷாட்கள் ஏதும் இல்லாமல் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். 28 ரன்கள் எடுத்திருந்த ஷிவம் துபேவை ஸ்பின்னர் குமார் கார்த்திகேயா நடையைக்கட்ட வைத்தார்.
அடுத்து வந்த அம்பதி ராயுடு 11வது பந்திலேயே முதல் பவுண்டரி அடித்தார். எனினும், இலக்கு குறைவாக இருந்ததால், சென்னை அணி எளிதாக வென்றது. 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காத, கெய்க்வாட் 40 ரன்களும், அம்பதி ராயுடு 20 ரன்களும் எடுத்திருந்தனர். நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய சென்னை பெறும் இரண்டாவது வெற்றி இது. அதேநேரம், விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மாவை 3வது ஓவரில் போல்டாக்கினார் துஷார் தேஷ்பாண்டே. 21 ரன்களில் ரோஹித் ஷர்மா நடையைக் கட்ட இஷான் கிஷன், கேமரூன் கிரீன் கைகோத்தனர்.
இஷான் கிஷன் 21 பந்துகளில் 32 ரன்கள் என நன்றாக ஆடிக்கொண்டிருந்தாலும் ஜடேஜா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 1 ரன்களுடன் பெவிலியன் பக்கம் நடையைக்கட்ட 8 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 73 ரன்களை சேர்த்தது.
கேமரூன் கிரீன் அடித்த பந்து நேராக ஜடேஜாவை நோக்கி வர கண்களை மூடி கையை நெற்றிக்கு நேராக நிறுத்த பந்து கையில் மாட்டிக்கொண்டது. அருகிலிருந்த அம்பயர் சற்று தடுமாறித்தான் போனார். 4ஆவது விக்கெட்டையும் பறிகொடுத்தது மும்பை. அடுத்து அர்ஷத் கானும் 2 ரன்களில் அவுட்டாக மும்பை ஃபேன்ஸ் ஹீட்டாகினர். அடுத்து யாரும் விக்கெட்டாக கூடாது என மும்பை ரசிகர்கள் பிரார்த்திக்கும்போது திலக் வர்மா எல்பிடபள்யூ ஆனார். அம்பயரை நம்பாமல் டிஆர்எஸ் சென்றும் பலனில்லை. அவுட் உறுதியாக 13 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 103 ரன்களில் மும்பை தடுமாறியது.
த்ரிஷ்டன் ஸ்ட டப்ஸ் சென்ற வேகத்தில் கோபமடைந்த டிம் டேவிட் 2 சிக்சர்கள் + 1 ஃபோர் என வெளுத்து வாங்கினார். அதே கோபத்துடன் அடுத்த பந்தையும் தூக்கி அடித்ததில் கேட்சாகி கோவத்தை தணித்துகொண்டு பெவிலியன் திரும்பினார்.
ஹிருத்திக் ஷோக்கீன், பியூஸ் சாவ்லா இணைந்து இறுதியில் போராட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. ரோஹித் தவிர்த்து, இஷான் கிஷன் முதல் அர்ஷத் கான் வரையிலான மும்பையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ரவீந்திர ஜடேஜாவும், சான்ட்ரும் சேர்த்து கட்டுப்படுத்தினர்.
சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மிட்ஷெல் சாட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிசண்டா மகளா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT