

வெலிங்டன்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பீல்டிங்கின் போது முழங்காலில் காயம் அடைந்த நியூஸிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சனுக்கு அறுவை சிகிச்சை தேவையாக உள்ளது. இதனால் அவர், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கடந்த மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் வீரரான நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் எல்லைக்கோட்டுக்கு அருகே துள்ளியவாறு கேட்ச் செய்ய முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், வில்லியம்சனுக்கு ஏற்பட்டுள்ள காயத்துக்கு நேற்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படது. இதில் அவருக்கு அடுத்த 3 வாரங்களில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக வில்லியம்சன் முழு உடற்தகுதியை எட்டுவது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. அவர், உடற்தகுதியை பெறாதபட்சத்தில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதை தவறவிடக்கூடும்.