

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகி உள்ளார். கடந்த மார்ச் 31-ம் தேதி போட்டிகள் தொடங்கிய நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் சொந்த காரணங்கள் மற்றும் தேசிய அணிக்கான போட்டிகள் காரணமாக கொல்கத்தா அணியில் இருந்து இந்த சீசனில் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அணியின் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக இங்கிலாந்து தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராயை ரூ.2.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா அணி.
ஜேசன் ராயின் அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக இருந்த நிலையில் அதைவிட கூடுதல் தொகைக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த சீசனில் கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. 2-வது ஆட்டத்தில் இன்று இரவு தனது சொந்த மைதானமான ஈடன் கார்டனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் ஜேசன் ராய் விளையாடமாட்டார் எனவும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இடம் பெறுவார் எனவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 32 வயதான ஜேசன் ராய், 2017-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடினார். தொடர்ந்து 2021-ம் ஆண்டு சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்திருந்தார். அந்த அணிக்காக 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு அரை சதத்துடன் 150 ரன்கள் எடுத்திருந்தார்.
அதேவேளையில் இங்கிலாந்து அணிக்காக 64 டி 20 ஆட்டங்களில் விளையாடி 137.61 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,522 ரன்கள் சேர்த்துள்ளார். கொல்கத்தா அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முதல் ஆட்டத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு பதிலாக ஜேசன் ராய் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. விக்கெட் கீப்பர் பணியை என்.ஜெகதீசன் மேற்கொள்ளக்கூடும்.
இன்றைய ஐபிஎல் ஆட்டம் கொல்கத்தா - பெங்களூரு