

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்தார்.
சர்ப்ராஸ் கான் 30 ரன்னும், அபிஷேக் பொரெல் 20 ரன்னும் எடுத்தனர். இறுதி கட்டத்தில் அக்சர் படேல் பொறுப்புடன் ஆடி 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றவர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் ஷமி, ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தலா 14 ரன்கள் எடுத்திருந்த தொடக்க வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் சஹா இருவரையும் நார்ஜே கிளீன் போல்ட்டாக்கி வெளியேற்றினார். இதன்பின் 5 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியாவை கலீல் அகமது அவுட் ஆக்கினார். என்றாலும், மறுமுனையில் இருந்த சாய் சுதர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு பக்கபலமாக விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் இருந்தனர். விஜய் சங்கர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். மில்லர் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை விளையாடினார்.
அதேபோல், சாய் சுதர்சன் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 18.1 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. நடப்பு சீசனில் குஜராத் அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.