Published : 04 Apr 2023 12:04 PM
Last Updated : 04 Apr 2023 12:04 PM

'டேய் துபே அவுட் ஆகுடா...' - தோனியைப் பார்ப்பதற்காக பொறுமை இழந்த சிஎஸ்கே ரசிகர்கள்!

சென்னை அணி ரசிகர்கள்

ஆளுமை அல்லது நாயக வழிபாடு என்பது காலங்காலமாக ஊறிப்போன நம் மரபில் இத்தகைய நிகழ்வுகள் ஆச்சரியமளிக்கக் கூடியதல்ல. நேற்று சிஎஸ்கே அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ஷிவம் துபே ஆடும்போது, அவரை ‘வெளியே போ’ அவுட் ஆகு என்று சிஎஸ்கே ரசிகர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது, தங்கள் தல தோனியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே என்றாலும் இன்னொரு வீரரை மட்டம் தட்டுவது என்பது கும்பல் மனப்பான்மையின் ஓர் எதிர்மறை செயலாகும்.

இத்தனைக்கும் ஷிவம் துபே கொஞ்சம் ஆரம்பத்தில் திணறினாலும், மார்க் உட் அவரைப் படுத்தி எடுத்தாலும் 2 அடுத்தடுத்த பவுண்டரிகளையும் லக்னோவின் சிறந்த ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் பந்துகளில் அடுத்தடுத்து 2 சிக்சர்களையும் விளாசினார். ஆனால், இவரது ஆட்டத்தை ரசிக்க மனமில்லாமல் தோனி வர வேண்டும் என்பதற்காக ‘டேய் துபே அவுட் ஆகுடா’ என்று ஒரு கூட்டம் தொடர்ந்து கத்தியபடியே இருந்தது. துபேயை நோக்கி இப்படி ரசிகர்கள் கூப்பாடு போடுவது முதல் முறையல்ல, இதே சீசனில் சிஎஸ்கே-யின் பயிற்சியின் போது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்ட அன்றும் டேய் ஷிவம் துபே என்று ரசிகர்கள் கூச்சலிட்டதும் நடந்ததாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. இவர்களுக்கு தங்கள் நாயகன், ‘தல’ தோனியைப் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்!

நேற்று, 4 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் ஆடுகின்றது, 42 வயதாகப்போகும் தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தை, குறிப்பாக அவரது சிக்சர்களைப் பார்க்க வேண்டும், ஹெலிகாப்டர் ஷாட்களை பார்க்க வேண்டும் என்று ஆர்வமடைவது, உற்சாகமடைவதில் தவறில்லை, அதற்காக விளையாடிக் கொண்டிருக்கும் வீரரை அவமானப்படுத்துவது போல் 'டேய் அவுட் ஆகுடா' என்று கத்துவதுதான் நாயக வழிபாட்டு மனோநிலையில் வக்கிரப்பகுதியாகும்.

நேற்று பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆடிய போதும் ரசிகர்கள் மேலும் அமைதியிழந்தனர், காரணம், தோனி இறங்காமல் போய் விட்டால் வந்தது வேஸ்ட் ஆகி விடுமே என்று நினைக்கின்றனர். நேற்று ரசிகர்களை ஏமாற்றவில்லை தோனி, இறங்கினார், மொத்தம் 3 பந்துகளைத்தான் சந்தித்தார், அதுவும் உலகின் ஃபாஸ்டஸ்ட் பவுலர்களில் ஒருவரான மார்க் உட்டை எதிர்த்து ஆட வேண்டும். மார்க் உட் வீசிய முதல் பந்து மணிக்கு 149 கிமீ வேகம் அதை தோனி ரீச் செய்து பாயிண்டின் மேல் தூக்கி விட்டார் சிக்ஸ்! ரசிக வெள்ளத்தின் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது.

இந்த ஷாட்டை விட அடுத்த பந்து அடித்த சிக்ஸ் இருக்கிறதே, அதுதான் டாப் கிளாஸ்! உட் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து அதிவேக ஷார்ட் பிட்ச் பவுன்சரை வீசினார், தோனியின் நெஞ்சுயரம் வந்த அந்த பந்தை அவர் ஒரு சுழன்று சுழன்று டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு மேல் அடித்தாரே பார்க்கலாம் பந்து இறங்குமா அல்லது இறங்காமல் சாலையில் போய் விழுமா என்பது போல் பறந்தது. ரசிகர்கள் மத்தியில் 2-3 அடுக்குகள் தாண்டிப் போய் விழுந்தது.

ஒரு காலத்தில் ஷோயப் அக்தர், பிரெட் லீ போன்ற அதிவேக பவுலர்களின் பந்தில் இப்படிப்பட்ட சிக்சர்களை தோனி அடித்ததைப் பார்த்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு மார்க் உட் பந்துகளில் அடித்த இந்த சிக்சர்கள் அந்த பழைய தோனியின் நினைவுகளைக் கிளறவே செய்யும். ஐபிஎல் தொடர்களிலேயே எத்தனையோ வேகப்பந்துகளை பவுன்சர்களை தோனி சிக்சர்களுக்குத் தூக்கியுள்ளார். ஆனால் நேற்று தோனி அடித்த அந்த 2வது ஹூக் ஷாட் சிக்ஸ் அவருடைய ஆகச்சிறந்த சிக்ஸ் என்றால் அது மிகையானதல்ல, இந்த வயதில் அடிக்கப்பட்ட திகைப்பூட்டும் ஒரு ஷாட் ஆகும். மார்க் உட்டே அசந்து போய் விட்டார்.

இதெல்லாம் சரி! அதற்காக மற்ற வீரரை அவுட் ஆகுடா டேய் என்று கூறுவது என்ன மனநிலை என்பது புரியவில்லை. ஹீரோ ஒர்ஷிப்பை நாம் எந்த மட்டத்திலும் பாசிட்டிவாக பார்க்க முடியாது, ஏனெனில் ஹீரோ ஒர்ஷிப் என்பது இன்னொருவரை மட்டம் தட்டும் மனநிலையை உருவாக்குவதாகும், அடுத்தவரை ‘ட்ரோல்’ செய்யும் மனநிலைகளுக்கு பின்னால் இத்தகைய ஹீரோ ஒர்ஷிப் மனநிலைதான் உள்ளது. எது எப்படியிருந்தாலும் தோனியின் அந்த 2வது சிக்ஸ் இப்போது நினைத்தாலும் ஒரு பயங்கரமான சிக்ஸ் என்பதை மறுப்பதற்கில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x