IPL 2023 RCB vs MI | விராட் கோலி - டு பிளெசிஸ்ஸின் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப்: பெங்களூரு அணி அபார வெற்றி

IPL 2023 RCB vs MI | விராட் கோலி - டு பிளெசிஸ்ஸின் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப்: பெங்களூரு அணி அபார வெற்றி
Updated on
1 min read

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 172 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு விராட் கோலி - டு பிளெசிஸ் இணை அபார துவக்கம் கொடுத்தது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, அணி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 48 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணியின் இளம் வீரர் திலக் வர்மா தனியாளாக அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக ஆடி அரை சதம் கடந்த அவர் 84 ரன்கள் எடுத்தார். அதனால், 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை அவுட்டாகமல் இருந்த திலக் வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் எடுத்திருந்தார். பெங்களூரு அணி தரப்பில் கரண் சர்மா 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலி - டு பிளெசிஸ் இணை அபார துவக்கம் கொடுத்தது. இருவரும் சேர்ந்து மும்பை பந்துவீச்சை பதம் பார்த்தனர். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்ட இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இருவரையும் அவுட் ஆக்க மும்பை பவுலர்கள் எடுத்த முயற்சி தோல்வி கண்டது.

இறுதியாக 15வது ஓவரில் தான் டு பிளெசிஸ்ஸை அவுட் ஆக்க முடிந்தது. இருவரும் சேர்ந்து 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன்பின் வந்த தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் மீண்டும் பெவிலியனுக்கு திரும்பினார். மேக்ஸ்வெல் முதல் இரண்டு பந்துகளில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி என விளாச, கடைசியில் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட சிக்ஸ் அடித்து வெற்றிபெற வைத்தார் விராட் கோலி.

இதனால் 16.2 ஓவர்களிலேயே 172 ரன்கள் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த விராட் கோலி 82 ரன்களும், டு பிளெசிஸ் 73 ரன்களும் எடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in