

ஜம்மு: நடப்பு தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன். ஹர்மீத் தேசாயை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளார் சத்யன். ஜம்முவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தேசிய சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக அவர் வென்றுள்ளார். முன்னதாக, கடந்த 2021-ல் அவர் இதில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல், காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 10 முறை ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா, சுதிர்தா முகர்ஜியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அடுத்தடுத்த தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ஜீத் சந்திரா மற்றும் அங்கூர் பட்டாசார்ஜி இணையர் முகமது அலி மற்றும் வான்ஷ் சிங்கால் இணையை வீழ்த்தி பட்டம் வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஸ்ரீஜா அகுலா மற்றும் தியா சித்தலே சாம்பியன் பட்டம் வென்றனர். கலப்பு இரட்டையரில் மானவ் தக்கர் மற்றும் அர்ச்சனா காமத் பட்டம் வென்றனர்.