

ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ.16.25 கோடி என்ற அதிக விலை கொடுத்து வாங்கியது. காரணம், தோனிக்கு வயதாகி விட்டதால் கேப்டன்சி பொறுப்பை பென் ஸ்டோக்ஸிடம் கொடுத்து விடலாம். பினிஷராகவும் இருப்பார். பவுலிங்கும் செய்வார் என்று ஒரு பெரிய எதிர்பார்ப்புதான். அதனால் அவருக்கு இந்த அதிகபட்ச விலை கொடுக்கப்பட்டது.
ஆனால், இப்போது அவர் வெறும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படப் போவதாக தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு அகமதாபாத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கே படை ஐபிஎல் 16-வது சீசனில் முதல் லீக் போட்டியில் நடப்பு ஐபிஎல் சாம்பியனான குஜராத் அணிக்கு எதிராக களமிறங்குகிறது. இதற்காக சிஎஸ்கே வீரர்களுடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், 4 ஓவர் பினிஷிங் ரோல் தேவைப்பட்டால் கேப்டன்சி மற்றும் சிஎஸ்கே திட்டமிடுதலின் மையக்குழுவில் முக்கியப் பங்கு என்று அனைத்துப் புலங்களுக்காகவும்தான் பென் ஸ்டோக்ஸுக்கு அந்த விலை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பவுலிங் செய்யமாட்டார் என்றால் அவர் காயத்தில் இருக்கின்றார் என்று பொருள். முழங்கால் காயம் அவரை சில காலமாகவே படுத்தி எடுத்து வருகிறது. சமீபத்தில் கடைசியாக அவர் ஆடிய வெலிங்டன் டெஸ்ட்டில் அதிகமாக பவுலிங் செய்யவில்லை. பேட்டிங்கிலும் காயத்தின் தாக்கத்தால் அவர் சிரமப்பட்டதை பார்க்க முடிந்தது.
பென் ஸ்டோக்ஸுக்கு அடுத்ததாக இருப்பது பெரிய சவால். அதுவும் இங்கிலாந்தின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் வகுத்துக் கொடுத்துள்ள புதிய ‘பேஸ் பால்’ அதிரடி பேட்டிங் உத்தியின் உடனடி சவால் ஆஷஸ் தொடர்தான். அதில் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஆட முடியாமல் போய்விட்டால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடுப்பாகிவிடும். ஐபிஎல் மீது விஷத்தை கக்கக்த் தொடங்கும். இதனால் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் வேண்டாம் வெறும் பேட்டிங் போதும் என்று இப்போது முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி, "எனது புரிதல் என்னவெனில், அவர் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பேட்ஸ்மேனாகவே களமிறங்கத் தயாராக இருக்கிறார்" என்றார். எனவே முதல் சில போட்டிகளில் அவர் பந்து வீசுவது கடினம் என்றே தெரிகிறது. ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர் பந்து வீசலாம் என்று தயக்கமாகவே கூறுகின்றது சிஎஸ்கே தரப்பு.
இது பற்றி ஆஸ்திரேலியரான மைக் ஹஸ்ஸி வேடிக்கையாக கூறும்போது, ‘வலை பயிற்சியில் அவரை 20-30 ஓவர்கள் வீச வைக்கலாம் என்று நினைக்கின்றேன். அவரது உடலில் அழுத்தம் கூட்ட பயிற்சிகளில் ஈடுபடச் செய்வேன். ஆஸ்திரேலியராக ஆஷஸ் தொடருக்கு முன் பென் ஸ்டோக்ஸின் காயத்தைத் தீவிரப்படுத்துவேன்’ என்று கூறினார்.
ஆனால், இறுதி மெசேஜ் என்னவெனில் பென் ஸ்டோக்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் பந்து வீசுவது கடினமே. அப்படியே வீசினாலும் முழு தாக்கம் செலுத்தும் வீச்சாக இருக்குமா என்பது சந்தேகமே. தோனி ஆல்-ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதனால்தான் அந்த விலை கொடுத்தாலும் பரவாயில்லை பென் ஸ்டோக்ஸ் வேண்டும் என்று ஏலம் எடுத்தனர். ஆனால், இப்போது பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்ய மாட்டார் என்பது சிஎஸ்கே அணிக்கு ஒரு பின்னடைவாக கூட இருக்கலாம்.