

ஷார்ஜா: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி உள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் அப்துல்லா ஷஃபிக். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பேட்ஸ்மேன் ஒருவர் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் டக் அவுட்டாவது இதுவே முதல் முறை.
பாகிஸ்தான் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆப்கன் அணி கைப்பற்றியுள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் ஷஃபிக் இழந்திருந்தார்.
23 வயதான அவர் கடந்த 2020 நவம்பரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி இருந்தார். இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் முதல் போட்டியில் மட்டுமே 41 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற அனைத்து போட்டிகளிலும் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
அவர் விளையாடிய கடைசி நான்கு டி20 போட்டிகளில் 7 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார். நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தலா இரண்டு முறை ரன் ஏதும் எடுக்காமல் அவர் வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் பிரதான வீரர்கள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.