

புதுடெல்லி: கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த், உடல்நிலை முழுமையாக குணமடைய போதிய காலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.
2 மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய, இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். சிகிச்சைக்குப் பின்னர் காயங்கள் குணமாகி வருகின்றன. அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்கவேண்டும் என்றும், தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி கூறியதாவது: ரிஷப் பந்த் இல்லாமல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அனைவரும் வருத்தமாக உள்ளோம். நான் ரிஷப் பந்த்தை விரைவில் நேரில் சென்று சந்திப்பேன். ரிஷப் பந்த் இல்லாமல் இந்திய அணி வீரர்களும் வருத்தமாக இருப்பர்.
ரிஷப் பந்த் இளம் வீரர்.அவரது கிரிக்கெட் வாழ்வில் இன்னும் நிறைய காலம் உள்ளது. ரிஷப் பந்த் சிறந்த வீரராகத் திகழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை. உடல்நிலை முழுமையாக குணமடைய அவர் போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். முழு உடல் தகுதி பெற்ற பின்னரே அவர் களத்துக்கு திரும்பவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.